Coaching Centers: இனி நுழைவுத் தேர்வுகளின் வெற்றியை பணமும் பயிற்சி மையங்களும்தான் முடிவு செய்யுமா? அதிர்ச்சி தரும் புள்ளிவிவரமும், விரிவான அலசலும்..
Coaching Centers: இனி நுழைவுத் தேர்வுகளின் வெற்றியை பணமும் பயிற்சி மையங்களும்தான் முடிவு செய்யுமா? அதிர்ச்சி தரும் புள்ளிவிவரமும், விரிவான அலசலும்..
பயிற்சி மையங்கள் எப்படி செயல்படுகின்றன? எதற்காக உருவாக்கப்பட்டன? நுழைவுத் தேர்வுகள் அவசியமா? அவை சம வாய்ப்பை அளிக்கிறதா? பொதுத் தேர்வின் நோக்கத்தையே சிதைக்கிறதா?
நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேசிய அளவில் முதல் 50 இடங்களைப் பெற்ற மாணவர்களில் 39 மாணவர்களின் விவரங்களைக் கொண்டு, தனியார் நாளிதழ் அண்மையில் ஆய்வு நடத்தியது. இதில் இடம்பெற்ற 39 மாணவர்களில் 38 பேர் நீட் தேர்வுக்கு, பயிற்சி மையங்களில் பயின்றிருக்கிறார்கள். 29 பேர் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்து இருக்கிறார்கள். அதேபோல 29 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்த உயர்சாதி மாணவர்கள் என்ற விவரமும் வெளியாகி உள்ளது. மேலும் இவர்கள் அனைவருமே நகரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பொருளாதார ரீதியில் உயரடுக்கில் இருப்பவர்கள் ஆவர்.
அதேபோல ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் கோட்டாவைச் சேர்ந்த பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளனர். இதனால், நுழைவுத் தேர்வுகள் வசதியான, நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றவை என்று அரசியல் தலைவர்களும் கல்வியாளர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பயிற்சி மையங்கள் எப்படி செயல்படுகின்றன? எதற்காக உருவாக்கப்பட்டன? நுழைவுத் தேர்வுகள் அவசியமா? அவை சம வாய்ப்பை அளிக்கிறதா? பொதுத் தேர்வின் நோக்கத்தையே சிதைக்கிறதா?
விரிவாகப் பார்க்கலாம்.
நாடு முழுவதும் மத்தியக் கல்வி நிறுவனங்களில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளில் சேர முறையே நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகளில் உயர் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்கள் எய்ம்ஸ், ஜிப்மர் மாதிரியான மத்திய மருத்துவக் கல்லூரிகளிலும், ஐஐடி உள்ளிட்ட மத்திய தொழில்நுட்பக் கழகங்களில் பொறியியல் படிப்பையும் படிக்க முடியும். இவை பெரும்பாலும் சிபிஎஸ்இ எனப்படும் மத்திய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைகின்றன. எனினும் பள்ளி பாடத்திட்டத்தைவிட மேம்படுத்தப்பட்ட வகையில், சிந்திக்கும் திறன், தர்க்க திறன் சார்ந்து கேட்கப்படுகின்றன. இதனால், பள்ளி வகுப்புகள் தாண்டி, சிறப்புப் பயிற்சி மையங்களில் மாணவர்களைப் பெற்றோர் சேர்க்கின்றனர். இதற்காக ராஜஸ்தானில் கோட்டா என்ற இடமே தனியாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்காக சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
பெரும்பாலும் கோட்டாவில் மட்டுமே செயல்பட்டு வந்த பயிற்சி மையங்கள், தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலும் கிளை தொடங்கி, செயல்பட ஆரம்பித்துள்ளன. வசதிபடைத்த மாணவர்கள் அனைவரும் பயிற்சி மையங்களில் இணைந்து படிக்கத் தொடங்கியுள்ளனர்.
பயிற்சி மையங்கள் செயல்படுவது எப்படி?
நாடு முழுவதும் பயிற்சி மையங்கள் 3 வகைகளில் செயல்படுகின்றன. பள்ளிகளே சொந்தமாக பயிற்சி மையம் வைத்திருப்பது, பள்ளிகளுடன் பயிற்சி மையங்கள் இணைந்து செயல்படுவது, பயிற்சி மையங்கள் தனித்து செயல்படுவது ஆகிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இதில், பயிற்சி மையங்களைக் கொண்டிருக்கும் பள்ளிகளில் ஓராண்டுக்கு ரூ.1.75 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பள்ளிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பயிற்சி மையங்களில் கட்டணம் 1 முதல் ரூ.1.5 லட்சமாக இருக்கிறது. புகழ்பெற்ற, பிராண்டட் பயிற்சி மையங்களில் குறைந்தபட்சம் 2.5 லட்சம் முதல் அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை, ஆண்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயிற்சி மையங்களே தகுதித் தேர்வு வைத்து பெயரளவுக்கு கட்டணத்தைக் குறைக்கின்றன. எனினும் இது வெகு சில மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இவைதாண்டி, உடனடிப் பயிற்சி வழங்கும் கிராஷ் கோர்ஸ்களுக்கு ரூ. 30 ஆயிரம் முதல் 2 லட்சம் வசூலிக்கப்படுகின்றன.
பண வசதி படைத்த பெற்றோர்கள், எங்களின் மகன்/ மகள் எப்படியாவது ஐஐடி, எய்ம்ஸில் சேர்ந்து படிக்க வேண்டும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்ற மன நிலையில் இருக்கின்றனர். பணத்தை செலவழிக்கின்றனர். மாதிரித் தேர்வு, பயிற்சிகளை பயிற்சி மையங்களில் எடுத்துக்கொள்ளும் சூழலில், பயிற்சி மையங்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றன.
பயிற்சி மையங்களில் தயாரானவர்கள்
தேசிய அளவில் மூன்றாமிடம் பிடித்த மாணவர் கவுஸ்தவ் பவுரி மற்றும் 6ஆம் இடம் பிடித்த சூர்யா சித்தார்த் ஆகிய மாணவர்கள், நீட் தேர்வுக்குத் தயாராக என்சிஇஆர்டி புத்தகம் அவசியம் என்று தெரிவித்துள்ளனர். அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த பிரபஞ்சன் உட்பட மூவருமே, புகழ்பெற்ற தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து ஆண்டுக்கணக்கில் தயாரானவர்கள். இதுபோல நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பெரும்பாலானோர் பயிற்சி மையங்களில் இணைந்து சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளனர்.
பயிற்சி மையங்களின் எண்ணிக்கையும் அவற்றின் கட்டணமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நுழைவுத் தேர்வுகளின் தேவை குறித்தும் அவை பள்ளி கட்டமைப்பிலும் பொதுத் தேர்வுகளின் நோக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவது குறித்தும் கல்வியாளர்கள் ABP Nadu-விடம் பேசினர்.
இதுகுறித்து கல்வியாளர் அஸ்வின் கூறியதாவது:
’’நாளுக்கு நாள் பயிற்சி மையங்கள் மிகவும் அவசியம் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் மத்தியில், தங்களின் பிள்ளைகள் தானாய்ப் படிப்பதைவிட, பயிற்சி மையங்களில் சேர்த்தால்தான் நன்றாகப் படிப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. சொல்லப்போனால், மாணவர்களின் மனநிலையே அப்படித்தான் இருக்கிறது. பயிற்சி மையங்கள் சென்றாலும் செல்லாவிட்டாலும், தாங்கள் படிக்க வேண்டும் என்பதைவிட, அங்கு சென்றால் எளிதில் தேர்ச்சி அடையலாம் என்று எண்ணத் தொடங்கிவ்ட்டனர்.
நுழைவுத் தேர்வுகளைப் பொறுத்தவரை, பாடங்களின் கான்செப்ட்டைப் புரிந்துகொண்டு படிக்க வேண்டும். முக்கியமான பாடங்களை, கேள்வி- பதில்களை மட்டும் படித்து, பயிற்சி பெறுவது போதாது.
என்ன தீர்வு?
நுழைவுத் தேர்வுகள் மூலம் எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைப்பதில்லை. எனினும் அரசு அதை அமல்படுத்திய சூழலில், மாநில அரசுகள், மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்றலாம்.
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுதான் உலகிலேயே கடினமான தேர்வு என்று ஓர் ஆய்வு சொல்கிறது. ஆனால் அதைக் கற்பிக்கத் தகுந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் இருப்பதில்லை. நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியையும் பள்ளிகளே வழங்க வேண்டும். பொதுத் தேர்வு தாண்டி, சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். ஆனால் இவை அனைத்துப் பள்ளிகளிலும் நடப்பதில்லை. இந்த இடைவெளியை பயிற்சி மையங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.
இதைத் தவிர்க்க பள்ளி அளவிலான பொதுத் தேர்வுகளையும் மத்தியக் கல்வி நிறுவனங்களுக்கான போட்டித் தேர்வுகளையும் ஒருங்கிணைத்து, சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளிகளே நல்ல, திறன்வாய்ந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து, நல்ல சம்பளத்தில் வேலைக்கு அமர்த்த வேண்டும்’’.
இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.
கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி
’’நுழைவுத் தேர்வுகள் வணிக மயமாகி நீண்ட நாட்களாகி விட்டன. 99 சதவீத மாணவர்கள் பயிற்சி மையங்கள் மூலமாகவே தேர்ச்சி பெறுகின்றனர். ஒரு பேட்டியில், தன்னுடைய நீட் பயிற்சிக்கு அப்பா 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாகச் சொல்கிறார் அகில இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் பிரபஞ்சன்.
பயிற்சி மையங்களில் சேராமல், சுயமாகப் படிக்கும் ஆவரேஜ் மாணவர்களால் 250- 300 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிகிறது. சுயமாகவோ யூடியூப் மூலமாகவோ படிப்பது, அவர்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு இல்லாத நிலையில், அரசு உதவிபெறும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக் கனியாக மாறிவிட்டது.
ஒரு பொறியியல் கல்லூரி முதல்வரை விட அதிக சம்பளம் கொடுத்து பயிற்சி மையங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதை அரசால் செய்ய முடியாது.
உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். பல்லாண்டுகளுக்கு முன், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்தும் மருத்துவக் கலந்தாய்வுக்கு மாணவர்கள், தங்களின் பெற்றோருடன் இருசக்கர வாகனங்கள், பேருந்தில் வருவர். அவர்களுக்கான கட்டணத் தொகைக்கான ரசீதைப் பெற்றுக்கொண்டு, அரசு அதைத் திருப்பிக் கொடுக்கும். இப்போது அந்த நடைமுறையே இல்லை. ஏனெனில் கலந்தாய்வுக்கு வரும் பெற்றோர்களும் மாணவர்களும் பெரும்பாலும் கார்களில்தான் வந்து இறங்குகின்றனர்.
நீட் தேர்வுக்கு முன்னால், நாமக்கல் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்த பணக்கார மாணவர்கள்தானே , மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர் என்று நீட் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பலாம். ஆனால் நீட் தேர்வுக்கு முன்பு 60 சதவீத பணக்காரர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தாலும் 40 சதவீத ஏழை மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வி சாத்தியமானது. ஆனால் இப்போது 1 அல்லது 2 சதவீத ஏழை மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடிகிறது.
என்னதான் தீர்வு?
நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இதுவரை ஒருமுறை கூட மீளாய்வு செய்யப்படவில்லை. தேர்வின் பலன்கள், பலவீனங்கள், பிரச்சினைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
நீட் தேர்வில் வெளிப்படைத் தன்மை வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் பெற்றோருடைய ஆண்டு வருமானம், பொதுத் தேர்வு மதிப்பெண்கள், பயிற்சி மைய விவரங்கள் பொதுவெளியில் பகிரப்பட வேண்டும்.
பிளஸ் 2 தேர்வு முடிந்த உடனே, கால அவகாசம் எதுவும் வழங்காமல் நீட் தேர்வை நடத்த வேண்டும். இதன்மூலம் பயிற்சி மையங்கள் கிராஷ் கோர்ஸ் நடத்திப் பணம் வசூலிப்பது நிற்கும்.
கிராமப்புற, விளிம்புநிலை மாணவர்களுக்கு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு கொடுக்கலாமா என்று அரசு ஆலோசிக்க வேண்டும்’’.
இவ்வாறு கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.