Engineering Counselling 2022: 65% நிரம்பிய இடங்களுடன் பொறியியல் கலந்தாய்வு நிறைவு; கல்லூரிகளில் சேரும் 1 லட்சம் மாணவர்கள்- முழு விவரம்
446 பொறியியல் கல்லூரிகள் கலந்துகொண்ட 2022ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது.
446 பொறியியல் கல்லூரிகள் கலந்துகொண்ட 2022ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இதன் முடிவில், 65 சதவீதம் மாணவர்கள் அதாவது 1 லட்சம் மாணவர்கள் இட ஒதுக்கீட்டு ஆணைகளைப் பெற்றுள்ளனர். 53,628 இடங்கள் காலியாக உள்ளன.
2022ஆம் ஆண்டுக்கான பொறியியல் 4 கட்டக் கலந்தாய்வுகள் மற்றும் துணைக் கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இதில் 446 பொறியியல் கல்லூரிகள் கலந்துகொண்டன. இதில் முதல்கட்டக் கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற்றது. கட் - ஆப் மதிப்பெண் 184 முதல் 200 வரை உள்ள 14,524 பேர் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டக் கலந்தாய்வு செப். 25 முதல் 27ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு அக்.13 முதல் அக்.15 வரையிலும் நடைபெற்றது. நான்காம் கட்டக் கலந்தாய்வு அக்.29ஆம் தேதி அக்.31 வரை நடைபெற்றது.
7 நாட்களுக்குள் சேரும் முறை
கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்கள் 7 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற புதிய முறையும் நடப்பாண்டு முதல் நடைமுறை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஏற்கெனவே தேர்வு செய்த கல்லூரியில் படிப்பதற்கு விருப்பம் தெரிவித்தாலும், வேறு கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தால் அதில் சேர விரும்புகிறேன் எனத் தெரிவித்தாலும், அதற்கான கட்டணத்தை தமிழ்நாடு பொறியியல் மாணவர் உதவி மையத்தில் செலுத்த வேண்டும். மாணவர்கள் சேர்க்கையின்போது செலுத்த வேண்டிய கட்டண விவரங்களும் ஒதுக்கீட்டு ஆணையில் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
4ஆவது கட்டக் கலந்தாய்வு முடிவில், 30,938 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், 3,660 பேருக்கு அரசு ஒதுக்கீட்டின்கீழ் பொறியியல் இடம் உறுதி செய்யப்பட்டு, வழங்கப்பட்டது.
துணைக் கலந்தாய்வு
துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் 13ஆம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. துணைக் கலந்தாய்வில் பொதுப் பிரிவில் 6,301 பேருக்கும் தொழிற்பிரிவில் 125 பேருக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அரசு ஒதுக்கீட்டின்கீழ் பொதுப் பிரிவில் 645 பேருக்கும் தொழிற்பிரிவில் 8 பேருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் மொத்தமாக 1,00,650 இடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்பட்டுள்ளன. அதாவது 4ஆவது கட்டக் கலந்தாய்வின் முடிவில் 91238 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுவே கடந்த ஆண்டு 4ஆவது கட்டக் கலந்தாய்வின் முடிவில் 81390 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதேபோல துணைக் கலந்தாய்வின் முடிவில் 9,412 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டில், 7206 இடங்களாக இருந்தது.
இதன்மூலம் இந்த ஆண்டு 65.23 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதாவது 53,628 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.