Half Yearly Exams: மழையால் தள்ளிப்போன அரையாண்டு தேர்வு.. திருநெல்வேலியில் தேர்வு தேதி அறிவிப்பு..!
அரையாண்டு தேர்வு விடுமுறை வந்ததால் மற்ற மாவட்ட பள்ளிகளை போலவே தென்மாவட்ட பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை விடுமுறையை அறிவித்தது.
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மழையானது வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை அனைத்தையும் ஒரு உலுக்கு உலுக்கியது. பல்வேறு சேதங்கள், பல்வேறு இன்னல்கள், வீடு இல்லாமல் வீதிகளில் தஞ்சம் என பொதுமக்கள் பட்ட துயர் மறக்க முடியாதது.
இந்த மழையினால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகளை பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பட முடியவில்லை.
சென்னை உட்பட வடதமிழகத்தில் அந்தா, இந்தா என ஒருவழியாக பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், வெள்ள பாதிப்புகள் காரணமாக தென் மாவட்டங்களில் பள்ளி அரையாண்டு தேர்வு நடத்தப்பட முடியவில்லை. இதைதொடர்ந்து, அரையாண்டு தேர்வு விடுமுறை வந்ததால் மற்ற மாவட்ட பள்ளிகளை போலவே தென்மாவட்ட பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை விடுமுறையை அறிவித்தது. மேலும், அரையாண்டு தேர்வானது விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான தேதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதன்படி, 6 முதல் 10 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வருகின்ற ஜனவரி 4ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கடந்த டிச.23ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. அன்று விடப்பட்ட விடுமுறையானது, ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மீண்டும் வருகின்ற 2ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
முன்னதாக, தமிழ்நாடு பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. அப்போது, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 11ம் தேதிக்குத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 11 முதல் 21ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெற்றது. ஆனால், தென் மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெறதா நிலையில், தற்போது அதற்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது.