தர்மபுரி டூ தைவான்; கல்வி எனும் ஆயுதம்தான் காரணம்- அரசுப்பள்ளி மாணவி அசத்தல் பேச்சு!
குக்கிராமத்தில் பிறந்தாலும், கடல் கடந்து படிக்க வாய்ப்பளித்தது கல்வி எனும் ஆயுதம்தான் என்று தைவான் படிக்கச்செல்லும் அரசுப் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ அசத்தலாகப் பேசி உள்ளார்.
நான் குக்கிராமத்தில் பிறந்தாலும், கடல் கடந்து படிக்க எனக்கு வாய்ப்பளித்தது கல்வி எனும் ஆயுதம்தான் என்று தைவான் நாட்டுக்குப் படிக்கச்செல்லும் அரசுப் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ அசத்தலாகப் பேசி உள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தின் முதலாம் ஆண்டு வெற்றி விழா சென்னையில் அண்மையில் கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரியில் இருந்து தைவானுக்குப் படிக்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ, குரலில் ஏற்ற, இறக்கத்துடன் சரியான உச்சரிப்பில் கணீர்க் குரலில் பேசினார். இந்த வீடியோ இணைய வாசிகளின் இதயங்களைக் கவர்ந்து வருகிறது.
வீடியோவில் மாணவி ஜெயஸ்ரீ பேசியதாவது:
’’என் தந்தை பெயர் பெருமாள். தாயார் பெயர் அமலா. இருவரும் கூலித் தொழிலாளிகளாக உள்ளனர். கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட அரசுப் பள்ளியில் படித்தேன். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 96 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெற்றேன். தற்போது தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறப்புப் பயிற்சி பெற்றேன்.
தொடர்ந்து தைவான் நாட்டின் மத்தியக் கல்வித் துறையின் ஊக்கத் தொகையுடன் குன் ஷான் பல்கலைக்கழகத்தில் (Kun Shan University) இளங்கலை இயந்திரப் பொறியியல் படிக்கப் போகிறேன்.
பனந்தூர் என்னும் குக்கிராமத்தில் பிறந்த எனக்கு தர்மபுரி நகருக்கு செல்வதே பெரும் கனவாக இருந்த காலங்கள் தாண்டி சிங்கார சென்னையில் பயிற்சி பெறவும், தற்போது கடல் கடந்து வேறொரு நாட்டிற்குச் சென்று படிக்கவும் வாய்ப்பளித்தது கல்வி எனும் ஆயுதம்தான். முதல் தலைமுறை பட்டதாரியான என்னால் முடியுமானால், நிச்சயம் உங்களாலும் முடியும். உங்களிடமிருந்து எதை வேண்டுமானாலும் பறிக்கலாம்; நீங்கள் கற்ற கல்வியைத் தவிர.
அதைத்தான் வள்ளுவரும்,
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவருக்கு
எழுமையும் ஏமாப்புடைத்து என்கிறார்.
தர்மபுரி டூ தைவான்; கல்வி எனும் ஆயுதம்தான் காரணம்- அரசுப்பள்ளி மாணவி அசத்தல் பேச்சு! #naanmudhalvan #cmstalin #dmkgovt #govtschool pic.twitter.com/WijhPI5OzG
— Ramani Prabha Devi (@ramaniprabadevi) August 10, 2023
என் மீது நம்பிக்கை வைத்த என் பெற்றோர்களுக்கும் என்னை செதுக்கிய ஆசிரியப் பெருமக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் முதல்வன், புதுமைப்பெண், இல்லம் தேடிக் கல்வி, வானவில் மன்றம் போன்ற சிறப்பான திட்டங்களை வழங்கி என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மாணவர் சமூகத்தின் சார்பாக நன்றியை உரித்தாக்குகிறேன்’’.
இவ்வாறு மாணவி ஜெயஸ்ரீ பேசினார்.
இந்த வீடியோ இணைய வாசிகளின் இதயங்களைக் கவர்ந்து வருகிறது.