School Leave: டெல்லியில் கால வரையறையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை; என்ன காரணம்?
டெல்லியில் கால வரையறை இன்றி தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கால வரையறை இன்றி தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அதனை சமாளிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை (நவம்பர் 5) முதல் கால வரையறை இன்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், சாலைகள், மின் பகிர்மான கட்டுமானங்கள், பைப்லைன் கட்டுமானங்களுக்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டன. அதேபோல் டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரிவோரில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்குமாறு கோரியுள்ளது. பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் வாகனங்களை ஒற்றைப் படை, இரட்டைப் படை அடிப்படையில் இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று காலை நிலவரப்படி காற்று மாசு 400க்கும் அதிகமாக உள்ளது.
உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள பாதுகாப்பான காற்றின் மாசு அளவை விட சுமார் 10 மடங்கு அதிகமாக மாசடைந்துள்ளது டெல்லி நகரம். இதன் PM 2.5 அளவு சுமார் 107.6 என அளவிடப்பட்டுள்ளது. PM 2.5 என்பது நுரையீரலிலும், பிற உறுப்புகளிலும் காற்று மூலமாக நுழையும் சிறிய துகள்கள் ஆகும். இவை நச்சுத்தன்மை கொண்டவை.
அதிகப்படியான காற்று மாசு காரணமாக குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். அதாவது கருவுற்று இருக்கும் பெண்கள் மாசு அடைந்த காற்றை சுவாசிக்கும் போது அவர்களுக்குள் வளரும் குழந்தையை அது நேரடியாக பாதிக்கும் என்று கருதப்படுகிறது. அதாவது அந்த குழந்தையின் மூளை வளர்ச்சியில் சில தடைகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
காற்றின் தரத்தை அளக்கும் அமைப்பானது, காற்றின் தரக் குறியீடு 50 என்றிருந்தால் அது நல்ல நிலைமை, 100 முதல் 101 என்றளவில் இருந்தால் திருப்திகரமான தரம், 101 முதல் 200 வரை இருந்தால் அது மிதமானது, 201 முதல் 300 வரை இருந்தால் அது மோசமான தரம், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான தரம், 401 முதல் 500 என்றிருந்தால் அதிபயங்கர மோசம் என்று நிர்ணயித்துள்ளது
உலகிலேயே காற்று மாசு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது டெல்லி. உலகிலேயே அதிக மாசடைந்த இடமாக இந்தியாவின் கங்கை சமவெளி கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாப் முதல் மேற்கு வங்கம் வரையிலான பகுதியில் வாழும் சுமார் 50 கோடி மக்கள் இதே மாசுபட்ட சூழலில் வாழ்ந்தால் சராசரியாக தங்கள் ஆயுளில் இருந்து சுமார் 7.6 ஆண்டுளை இழக்க நேரிடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.