CUET UG 2024: க்யூட் இளநிலைத் தேர்வு தேதியில் மாற்றம் : யுஜிசி தலைவர் பேட்டி
CUET UG 2024 Exam Date: நாடாளுமன்றத் தேர்தல் தேதிகளை அடிப்படையாகக் கொண்டு, 2024ஆம் ஆண்டுக்கான க்யூட் இளநிலைத் தேர்வு தேதிகள் மாறலாம் என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
![CUET UG 2024: க்யூட் இளநிலைத் தேர்வு தேதியில் மாற்றம் : யுஜிசி தலைவர் பேட்டி CUET UG 2024 Exam Dates May Shift Based On Lok Sabha Election 2024 Schedule Know Details CUET UG 2024: க்யூட் இளநிலைத் தேர்வு தேதியில் மாற்றம் : யுஜிசி தலைவர் பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/10/a059f727a7e8edeb5ad23cce04892c0d1662801904756381_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாடாளுமன்றத் தேர்தல் தேதிகளை அடிப்படையாகக் கொண்டு, 2024ஆம் ஆண்டுக்கான க்யூட் இளநிலைத் தேர்வு தேதிகள் மாறலாம் என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் இளநிலைத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்வு தேதிகள் மாறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
2022ஆம் ஆண்டு முதல் க்யூட் தேர்வு
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களும் க்யூட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. 2022- 23ஆம் கல்வி ஆண்டு முதல் இந்த தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்தத் தேர்வு, ஆண்டுதோறும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வுகள் முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது.
இளநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு 2024ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி தொடங்கி, மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூன் 30ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 மற்றும் 3வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் தேதிக்குப் பிறகு இறுதித் தேர்வு தேதிகள்
இதற்கிடையே நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு, இந்த மாதம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார், ’’தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ள தேதிகள் உத்தேசமானவை மட்டுமே.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, க்யூட் இளங்கலைத் தேர்வு தேதிகளை என்டிஏ இறுதி செய்யும். எனினும் தற்போது மே 15 முதல் தேர்வு உத்தேசமாக தொடங்க உள்ளது’’ என்று ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கலப்பு முறையில் தேர்வு
முதல்முறையாக க்யூட் தேர்வு இந்த முறை கலப்பு முறையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சில பாடங்களுக்கு கணினி வழியாகவும் பிற பாடங்களுக்கு பேனா – காகித முறையிலும் க்யூட் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வர்கள் https://cuet.nta.nic.in/about-department/introduction/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். அதில், CUET UG 2024 Registration என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
க்யூட் தேர்வு குறித்த முழுமையான அறிவிக்கையைக் காண: https://exams.nta.ac.in/CUET-UG/images/public-notice-for-cuet-ug-2024.pdf என்ற இணைப்பைக் காணலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://cuet.nta.nic.in/
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)