க்யூட் தேர்வு மாநிலங்களின் உரிமையைப் பறிக்காது: அமைச்சர் பொன்முடிக்கு மத்திய அரசு கடிதம்
க்யூட் தேர்வு மாநிலங்களின் உரிமையைப் பறிக்காது என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
க்யூட் தேர்வு மாநிலங்களின் உரிமையைப் பறிக்காது என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் யுஜிசி உள்ளிட்ட உயர் கல்வி ஆணையங்கள், 2020ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையைப் படிப்படியாக நாடு முழுவதிலும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு இளங்கலை கல்லூரிப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) என்ற திட்டத்தை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு, நாடு முழுவதும் 45 மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இந்தப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளில் இந்தத் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், இந்த நுழைவுத் தேர்வு முறையைப் பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் க்யூட் எனப்படும் இளங்கலை கல்லூரிப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு, மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தத் தேர்வுக்கு எதிப்புத் தெரிவித்து, தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 12ஆம் தேதி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இதற்கு திமுக, கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக ஆதரவு தெரிவித்த நிலையில், சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், க்யூட் தேர்வு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உரிமையைப் பறிக்காது என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
''க்யூட் பொது நுழைவுத் தேர்வு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உரிமையைப் பறிக்காது. கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மத்திய அரசும் மேற்கொள்ள முடியும்.
க்யூட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி எடுக்கும் தேவையை நீக்குகிறது. 13 மொழிகளில் தேர்வை எழுதும் வசதியை வழங்குகிறது. மாணவர்களுக்கான வாய்ப்பை அதிகரித்து, பெற்றோரின் பொருளாதாரச் சுமையை வெகுவாகக் குறைக்கிறது.
தேசிய கல்விக் கொள்கையின்படி மனப்பாட மதிப்பீட்டைத் தவிர்த்து, படைப்பாக்க மதிப்பீட்டை ஊக்குவிக்கிறது. விளிம்புநிலை மக்களின் நலனை க்யூட் தேர்வு உறுதி செய்கிறது. மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகத் தேர்வுகளை எழுதலாம். இதை ஒரே விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடலாம். இதன்மூலம் ஒவ்வொரு முறையும் மாணவர்கள் தேர்வெழுதத் தனித்தனியாகப் பணம் கட்டத் தேவையில்லை.
க்யூட் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சேர்க்கை நடைபெறும். பயிற்சி மையங்களின் மனப்பாடக் கருத்தியலைத் தவிர்த்து, பாடங்களைப் புரிந்து படிக்கும் அடிப்படையில்தான் க்யூட் தேர்வு கேள்விகள் அமைக்கப்படும்.
நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான தேர்வு மையங்களில் இருந்து தங்களுக்குத் தேவையான தேர்வு மையங்களை மாணவர்கள் தெரிவு செய்துகொள்ளலாம். இதில், பொது நுழைவுத் தேர்வு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உரிமையைப் பறிக்கத் தேவையில்லை''.
இவ்வாறு மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்