Common Syllabus: பல்கலை., கல்லூரிகளில் பொது பாடத்திட்டம்: உயர் கல்வியில் ஜனநாயக மறுப்பு ஏன்?- மக்கள் கல்வி கூட்டியக்கம் கேள்வி
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பொது பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து, உயர் கல்வியில் ஜனநாயகத்தை மறுப்பது ஏன் என்று மக்கள் கல்வி கூட்டியக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பொது பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து, உயர் கல்வியில் ஜனநாயகத்தை மறுப்பது ஏன் என்று மக்கள் கல்வி கூட்டியக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து மக்கள் கல்வி கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளதாவது:
''தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக உயர்கல்வி மன்றம் (டான்ஸ்கி) அறிவுறுத்தியுள்ளது. இது கல்விப் பரப்பில் ஜனநாயகத்தை முடக்கும் அடக்குமுறையாகும். தமிழ்நாட்டின் தனிக் கல்விக்கொள்கை உருவாகிவரும் வேளையில் இப்படி அதிரடித் தாக்குதலாக அரசு "ஒரே நாடு ஒரே பாடத்திட்டத்தை" திணிப்பது கண்டிக்கத்தக்கது. எந்த வித நெருக்கடியும் ஏற்படாத நிலையில், இப்படி ஒரு திட்டத்தை அரசு கொண்டு வருவதன் உள் நோக்கம் கேள்விக்குறியதாகும். ஒரு புறம் தேசியக் கல்விக்கொள்கையை எதிர்க்கின்றோம் என அறிவிக்கும் அரசு, அதற்கு நேர் மாறாக இம்மாதிரி திட்டத்தை அமல்படுத்துவதன் நோக்கம் என்ன?
உலகில் கல்வித்துறையில் புதுப் புது துறைகள் உருவாகி வருகின்றன. அவற்றிற்கு ஏற்ற பாடத்திட்டங்களை பல்கலைக் கழகங்கள் தங்களுடைய பிரத்யேக கல்வித்திட்டக் குழுக்கள் மூலம் தகுந்த வல்லுனர்களைக் கொண்டு உருவாக்கி, கல்விப்பேரவை, ஆட்சிக்குழு போன்ற பல அடுக்குகளில் விவாதித்து நடைமுறைக்குக் கொண்டுவருவகின்றன. பல்கலைக் கழக மானியக் குழுவே கூட பாடத்திட்டங்களின் வடிவமைப்பை மட்டுமே வழிகாட்டுதலாக முன்வைக்குமே தவிர, அதை அப்படியே கடைப்பிடிக்க வலியுறுத்துவதில்லை.
உயர்கல்வியை மிகவும் பாதிக்கும்
தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் தன்னாட்சிக் கல்லூரிகள் உள்ளன. அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியே புதுமையான மற்றும் தரமான பாடத்திட்டங்களை உருவாக்கி, முறையான பாடக்குழுக்களை அமைத்து கல்விப் பேரவைகள் மூலம் அவை ஏற்கப்பட்டு கற்பிக்கப்படலாம் என்பதே ஆகும். தன்னாட்சி நிலை வழக்கத்திற்கு வந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவர்களுக்கான சுதந்திரத்தை முற்றிலும் முடக்கும் இந்த புதிய நடைமுறை, தன்னாட்சிக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் கல்வி சுதந்திரத்தை இழக்க வைக்கும். ஒற்றைப் பாதை மூலம் ஆட்சியில் உள்ள அரசு எந்தப் பாடத்திட்டத்தையும் திணிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் தன்னாட்சிக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மறுபுறம் பாடதிட்ட உருவாக்கத்தில் தன்னாட்சி மறுப்பு. இப்படி குழப்ப நிலையை அரசு ஏற்படுத்துவது தமிழகத்தில் உயர்கல்வியை மிகவும் பாதிக்கும்.
யாருக்கான சமரசம்?
பலகலைக் கழகங்களும், தன்னாட்சிக் கல்லூரிகளும் உருவாக்கும் பாடத்திட்டங்களில் குறைகள் இருக்குமானால், அவை குறித்து புகார்கள் இருக்குமானால், அவை பற்றிய ஒரு ஆய்வு செய்து அவற்றை எவ்வாறு போக்குவது என்பது பற்றி சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் அரசு உரையாடல்களை மேற்கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து இம்மாதிரி திட்டத்தை திணிப்பது தமிழகத்தின் ஒட்டு மொத்த உயர்கல்வித் தரத்தையும் உறுதியாகப் பாதிக்கும். இதில் 25 சதவிகித பாடங்களை அந்தந்தக் கல்வி நிலையங்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்பது யாருக்கான சமரசம்? பன்மைத்துவத்தை மறுக்கும் இந்தத் திட்டம் ஆபத்தானது. தமிழ் நாட்டில் பிற்போக்கு அரசு ஆட்சி அமைக்குமானால் இதன் மூலம் அது எளிதாக தங்களுடைய பாடத்திடங்களைப் புகுத்திவிடும்.
வளர்ந்த நாடுகளில் ஒரே பாடத்திட்டம் என்ற நடைமுறை இல்லை. தமிழ், ஆங்கிலம் என மொழிப்பாடங்களிலும் ஒரே பாடத்திட்டம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவை எடுப்பதற்கு முன்னதாக அது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை தமிழக அரசோ, தமிழக உயர்கல்வி மன்றமோ நடத்தவில்லை.
தகுதியற்ற சில நூல்கள் பாடங்களாக வைக்கப்பட்டிருந்தால் அது பற்றிய விவாதத்தை, ஆய்வை முறையாக மேற்கொண்டு தக்க நடவடிக்கைகள் எடுக்கலாம். பாடதிட்டங்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செழுமைப்படுத்தப்படவேண்டும், தேவையான மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்ற நடைமுறையை இந்தத் திட்டம் செயல்படுத்தவே இயலாது.
மூன்று வருடங்களுக்கு ஒரு முறை உயர்கல்வி மன்றம் பாடத்திட்டம் தயாரித்துக் கொடுப்பது சாத்தியமும் இல்லை. அதற்கான தேவையும் எழவில்லை. அப்படியெனில் பல்கலைக்கழகங்களில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட பாடத்திட்டக்குழுக்கள் கலைக்கப்படும் நிலைதான் உருவாகும். பாடத்திட்ட வடிவமைப்பில் பல வல்லுனர்களின் பங்கேற்பு மறுக்கப்படும். சிலர் மட்டுமே ஒட்டுமொத்த தமிழகத்தின் உயர்கல்விப்பாடதிட்டங்களை உருவாக்கும் சர்வாதிகார அமைப்பு உருவாகும். எனவே தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டுகின்றோம். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் தனித்துவமான கல்விக் கொள்கை உருவாகும் வரை எந்த வித மாற்றங்களையும் கல்விதிட்டங்களில் திணிக்கவேண்டாம் என்றும் கோருகின்றோம்''.
இவ்வாறு மக்கள் கல்வி கூட்டியக்கம் தெரிவித்துள்ளது.