(Source: ECI/ABP News/ABP Majha)
Chennai Bomb Threat: சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் புரளியே; குற்றவாளியைப் பிடிக்க சைபர் படை- ஆணையர் பேட்டி
Chennai Bomb Threat News: சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியே என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
Chennai Bomb Threat Latest News: சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியே என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதேபோல இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சென்னை காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர் ஒருவர், மின்னஞ்சல் மூலம் இன்று (பிப்.7) வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கோபாலபுரம், ஜெ.ஜெ.நகர், ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோல சாந்தோம், பெரம்பூர், பூந்தமல்லி, சாந்தோம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர், மோப்ப நாய் உதவியுடன் சோதனைகளை நடத்தினர்.
யாரும் பயப்பட வேண்டாம்
பள்ளி நிர்வாகத்தினர் குறுஞ்செய்தி அனுப்பியதை அடுத்து, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். இதற்கிடையே யாரும் பயப்பட வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுத்தது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.
ஒரே இ- மெயில் முகவரி
இந்நிலையில், சென்னை காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா இன்று (பிப்.8) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறும்போது, ’’சோதனைகளுக்குப் பிறகு, பள்ளிகளில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இன்று காலை 10.30 முதல் 11 மணிக்குள் இ – மெயில் வந்தது.
அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே இ- மெயில் முகவரியில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. எனினும் மெயிலில் எந்த தேவையும் கேட்கப்படவில்லை. அவை குறித்த கூடுதல் தகவல்களை, தற்போது அளிக்க முடியாது. பள்ளிகளில் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு, ஏற்கெனவே விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல், வெறும் புரளிதான் என்று தெரிய வந்துள்ளது.
சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் மிரட்டல் விடுத்த நபரைக் கண்டுபிடிக்க சைபர் படை அமைக்கப்பட்டுள்ளது. பெற்றோரும் பொது மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்’’ என சென்னை தெற்கு காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.