Class 1 Age: பெற்றோரின் கவனத்திற்கு! குழந்தைகளை 1ஆம் வகுப்பில் சேர்க்க கட்டுப்பாடு - மத்திய அரசு கூறும் வழிமுறைகள்!
6 வயது ஆனால்தான் 1ஆம் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகளை வகுக்கக் கோரி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
6 வயது ஆனால்தான் 1ஆம் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகளை வகுக்கக் கோரி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மாணவர்களின் அடிப்படைக் கற்றலை மேம்படுத்த இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குழந்தைகளை 3 வயதில் மழலையர் வகுப்பில் சேர்க்கலாம் எனவும் 3 ஆண்டுகளுக்கு ப்ரீ- கேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய வகுப்புகளை அவர்கள் படிக்க வேண்டும் என்றும் வழிமுறைகளில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 6 வயது முடிவடையும் முன்னரே மாணவர்களை 1ஆம் வகுப்பில் சேர அனுமதிக்கின்றன. உதாரணத்துக்கு அசாம், குஜராத் புதுச்சேரி, தெலங்கானா மற்றும் லடாக் உள்ளிட்ட மாநிலங்களில் 5 வயது ஆகி விட்டாலே ஒன்றாம் வகுப்பில் சேரலாம். ஆந்திரப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஹரியாணா, கோவா, ஜார்க்கண்ட், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் சேர முடியும்.
சேர்க்கை விகிதத்தில் பாதிப்பு
இதுகுறித்து மத்திய அரசு கூறும்போது, ’’மாணவர்கள் பல்வேறு மாநிலங்களுக்குப் படிக்கச் செல்லும்போது வயது வித்தியாசம் சிக்கலை ஏற்படுத்துகிறது. சிலர் குறைந்த வயது கொண்டவர்களாகவும் சில மாணவர்கள் அதிக வயது கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இது மாணவர் சேர்க்கை விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் 6 வயது நிறைவடைந்த மாணவர்களையே 1ஆம் வகுப்பில் சேர்க்க உரிய நடவடிக்கையை படிப்படியாக எடுக்க வேண்டும். மாணவர்களின் அடிப்படைக் கற்றலை மேம்படுத்த இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
குழந்தைகளை 3 வயதில் மழலையர் வகுப்பில் சேர்க்கலாம். 3 ஆண்டுகளுக்கு ப்ரீ- கேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய வகுப்புகளை அவர்கள் படிக்க வேண்டும்’’ என்று மத்திய அரசு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கை
கேந்திரியா வித்யாலயா, சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி வாரியங்களில் 6 வயது ஆனால் மட்டுமே 1ஆம் வகுப்பில் சேர்க்க முடியும் என்று மாணவர் சேர்க்கை விதிமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது. புதிய கல்விக் கொள்கை அம்சங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய கல்விக் கொள்கை 5+3+3+4 பள்ளி மாதிரியை அறிமுகம் செய்தது. இதன்படி, 3 முதல் 6 வயது வரை மழலையர் பள்ளியிலும் 6 முதல் 8 வயது வரை 1 மற்றும் 2ஆம் வகுப்பு படிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
மத்திய அரசு அறிமுகம் செய்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இதன்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்புவரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம். இவர்களுக்கான கட்டணத்தை அரசே வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
10ஆம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய அனைத்து பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.