CBSE Scholarship 2024: கடைசி வாய்ப்பு; சிபிஎஸ்இ கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி- விவரம்!
கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்து மத்திய, மாநில அரசுகள் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் தங்களின் கல்வியை தொடர, பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
CBSE Single Girl Child Scholarship 2024: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒற்றைப் பெண் குழந்தைகள், மெரிட் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டதாக சிபிஎஸ்இ அறிவித்த நிலையில், மாணவர்கள் விண்ணப்பிக்க ஜனவரி 10 கடைசித் தேதி ஆகும். பள்ளிகள் ஜனவரி 17ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைப் புதுப்பிக்கவும் அதே தேதிகளில் கால வரம்பு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
2024ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ வாரியத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்து, தற்போது சிபிஎஸ்இ பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். குடும்பத்தில் ஒரே பெண் குழந்தையாக இருந்து, கல்வியில் சிறந்து விளங்கும் மாணவிகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். எனினும் 60 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அதேபோல ஒரு கல்வி ஆண்டில் மாதம் ரூ.1500-க்கு மிகாமல், பள்ளியின் கல்விக் கட்டணம் இருக்க வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான கல்விக் கட்டணம் மாதத்துக்கு ரூ.6,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒற்றைப் பெண் குழந்தைகள், ஓராண்டு கல்வி உதவித்தொகை பெறலாம். அடுத்த ஆண்டு மீண்டும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். எனினும் 11ஆம் வகுப்பில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியது முக்கியம்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
1. 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
2. விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட ஆதார் கார்டு
3. கேன்சல் செய்யப்பட்ட காசோலை அல்லது வங்கி பாஸ்புக்
2 ஆண்டுகளுக்கு மாதம் 500
இந்தத் திட்டத்தின்கீழ் மாதாமாதம் 500 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும். மொத்தம் 2 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும். ஏற்கெனவே 2024ஆம் ஆண்டு விண்ணப்பித்து, உதவித் தொகை பெற்றவர்கள் புதுப்பிக்கவும் விண்ணப்பிக்கலாம்.