சிபிஎஸ்இ தேர்வு: மதிப்பெண் திருப்தி இல்லாத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு மதிப்பீட்டு முறையில் ஒதுக்கப்படும் மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை.
சிபிஎஸ்இயில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் இதுக்குறித்து இன்று முதல் பள்ளிகளில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வந்தது. மாணவர்களின் நலன் கருதி அனைத்து பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தானது. இதேப்போன்று கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் தொடர்பாக முடிவெடுக்க 13 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் வகுத்த நெறிமுறைகளின் படி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30 சதவீதம், 12ஆம் வகுப்பில் நடத்தப்பட்ட யூனிட் தேர்வுகள்/ மிட் டெர்ம்/ பிரீ போர்ட் தேர்வுகளில் பெற்ற 40 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.
இந்நிலையில் தான் தற்போது வெளியாகியுள்ள உள்ள இந்த மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பள்ளிகளில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண்கள் குறித்து பள்ளிகள் அளிக்கப்படும் புகாரினை பரிசீலனை செய்து உரிய பதிலை பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தெரிவிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு மதிப்பீட்டு முறையில் ஒதுக்கப்படும் மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், அவர்கள் விரும்பினால் வரும் ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பு தேர்வு எழுதலாம் எனவும் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
எனவே பள்ளிகளில் மாணவர்கள் அளிக்கும் புகாரினையடுத்து நடவடிக்கையில் திருப்தி இல்லை என்றால், மாணவர்கள் எழுத்துத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். இந்தத்தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மேம்பாட்டு தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் கொரோனா தொற்றின் காரணமாக சிபிஎஸ்இயில் 30 சதவீத குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வினாத்தாளில் அதிக MCQ (multiple choose questios) அடிப்படையிலான கேள்விகள் இருக்கும் எனவும் இந்த தேர்வு முறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட மாதிரி தாள் போலவே இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.