B Ed Admission 2025: தொடங்கிய பி.எட். மாணவர் சேர்க்கை; ஜூலை 9 கடைசி- விண்ணப்பிப்பது எப்படி?
பி.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் ஜூலை 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு 20.06.2025 தொடங்கி 09.07.2025 அன்று முடிவடையும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
பி.எட். எனப்படும் இளங்கலை கல்வியியல் படிப்பை மேற்கொள்ளும் நபர்கள் மட்டுமே அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும். இது ஆசிரியர் பயிற்சி ஆகும். பள்ளிகளில் பணியாற்ற அடிப்படைத் தகுதிகளில் ஒன்றாகும்.
விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்
தமிழ்நாட்டில் பி.எட். படிப்பில் அரசுக் கல்லூரிகளில் 900 இடங்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1,040 இடங்கள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றின் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், இதற்கு விண்ணப்பிக்க அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். பி.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு 20.06.2025 தொடங்கி ஜூலை 9 அன்று முடிவடையும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2025- 26ஆம் கல்வியாண்டிற்கான பி.எட் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். விருப்பம் உள்ள தேர்வர்கள் 20.06.2025 அன்று முதல் 09.07.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முக்கியத் தேதிகள் என்னென்ன?
18.07.2025 அன்று மாணவர் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும்.
21.07.2025 முதல் 25.07.2025-க்குள் மாணவர்கள் தங்கள் விருப்பக் கல்லூரியைத் தேர்வு செய்யலாம்.
28.07.2025 அன்று மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள் நுழைவு ஐடி மூலம் www.iwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும்.
முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது?
ஆகஸ்டு 6 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன் தெரிவித்துள்ளார்.
எந்தெந்த இளநிலை பட்டப் படிப்பை முடித்தவர்கள் எந்தெந்த கல்வியியல் படிப்புகளில் சேரலாம் என்பது குறித்த தகுதியை https://static.tneaonline.org/docs/arts/bed-eligibility.pdf?t=1726548822934 என்ற இணைப்பை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
கூடுதல் தகவலுக்கு: www.tngasa.in






















