பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் செம்மல் விருது: வழங்கிய அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர்
ஆசிரியர் தினத்தை ஒட்டி குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் இல்லத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, 'ஆசிரியர் செம்மல்' விருது வழங்கப்பட்டது.
தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் சார்பில் ஆசிரியர் தினத்தைப் போற்றும் வகையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இல்லத்தில் ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கான பதக்கங்களையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:
''தமிழ்நாடு கல்வியில் முன்னணியில் இருப்பதற்கு ஆசிரியர்களே காரணம். எல்லா மாணவர்களிடமும் நிச்சயம் ஏதாவது திறமை இருக்கும். அந்தத் திறமையை கண்டறிந்து அவற்றை வளர்க்க ஆசிரியர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
ஒரு மாணவனின் திறனை வளர்த்தெடுப்பதில் கல்லூரியில் இருக்கும் பேராசிரியரை விட பள்ளியில் இருக்கும் ஆசிரியருக்குத்தான் பங்கு அதிகம். குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை யூபிஎஸ்சி தேர்வு போல சிறந்த தேர்வுகளை வைத்து தேர்வு செய்து எடுக்க வேண்டும் அப்போது இந்த நாடு கல்வியல் மிகச்சிறந்த நாடாக முன்னேறும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.
பள்ளியிலேயே நற்பண்புகளை வளர்க்க வேண்டும்
ஒரு மாணவனுக்கான நற்பண்புகள் அனைத்தும் பள்ளியிலேயே வளர்த்து விட வேண்டும் கல்லூரிக்கு வந்த பிறகு அந்த மாணவனை மாற்றுவது மிகவும் சிரமமாக உள்ளது.
ஆசிரியர்கள் தங்களுடைய கடமையை சரியாக செய்து விட்டால் காவல்துறையினருக்கு பெரிதாக வேலை இருக்காது என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே ஆசிரியர்கள் சமுதாயத்திற்கு நல்ல ஒழுக்கமான மாணவர்களை உருவாக்கி தர வேண்டும்.
அனைத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை
ஒரு மாணவனை ஒழுக்கம் உள்ளவனாக வளர்த்து விட்டால் அவனுக்கு உள்ள திறமையை பயன்படுத்தி நிச்சயம் அவன் வாழ்க்கையில் நல்ல இடத்திற்கு முன்னேறி விடுவான். ஒரு சிறந்த ஆசிரியரின் கடமை என்பது தங்களிடம் பயிலும் மாணவர்களை சமுதாயத்தில் சிறந்த குடிமக்களாக மாற்றுவது.
ஒரு ஆசிரியர் அனைத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. தனக்கு 100% சரி எனத் தெரிந்தவற்றை மட்டும் கற்றுக் கொடுத்தால் போதும். தவறான விஷயத்தை அவன் மனதில் ஏற்றி விட்டால் பின்னாளில் அவன் ஆசிரியரை தவறாக நினைப்பான்''.
இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.