Science Teacher Award: ''விருதுக்கு நாங்க தகுதி இல்லையா?'' அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் வேதனை
Science Teacher Award: அறிவியல் ஆசிரியர்களின் விலை மதிப்பற்ற பணிகளை அங்கீகரிக்கும் விதமாக 2018 முதல் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது (Science Teacher Award) வழங்கப்பட்டு வருகிறது.
அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் நாங்கள் விருதுக்குத் தகுதியானவர்கள் இல்லையா என்று அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் அறிவை வடிவமைப்பதிலும், அறிவியல் கற்றல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதிலும், உயர் கல்வியில் மாணாக்கர்கள் அறிவியல் துறையினை எடுப்பதற்கும் அறிவியலாளர்களாக உருவாக்குவதற்கும் அறிவியல் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
அறிவியல் ஆசிரியர்களின் விலை மதிப்பற்ற பணிகளை அங்கீகரிக்கும் விதமாக 2018 முதல் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது (Science Teacher Award) வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் நகரம் இந்த விருதை வழங்கி வருகிறது.
உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவில் அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது.
அறிவியல் நகரத்தால் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும். ரொக்கப்பரிசு காசோலையாகவும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தகவல் மற்றும் விண்ணப்பப் படிவத்தை www.sciencecitychennai.in என்னும் அறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது.
நாங்கள் யாரும் தகுதியானவர்கள் இல்லையா?
இந்த நிலையில், அறிவியல் விருது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அரசு நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் ’ஏபிபி நாடு’விடம் பேசினர். அவர்கள் கூறும்போது, ’’அறிவியல் ஆசிரியர் விருது உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. ஆனால் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் யாரும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. நாங்கள் யாரும் தகுதியானவர்கள் இல்லையா?
நாங்கள் நிறைய செயல்திட்டங்களைச் செய்திருக்கிறோம். புத்தாக்கத் திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். ஏராளமான மாணவர்களை அறிவியல் சார்ந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி இருக்கிறோம்.
உயர் கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும்
ஆனால் எங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான இடம் இதில் இல்லை. அறிவியல் நகரத்தை வழிநடத்தும் உயர் கல்வித்துறை ஆவன செய்து, எங்களையும் பரிசீலிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.
இதையும் வாசிக்கலாம்: Science Teacher Award: அறிவியல் ஆசிரியரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த விருது- விண்ணப்பிப்பது எப்படி?