Anti Drug Club: போதைப்பொருளுக்கு செக்: பள்ளி, கல்லூரிகளுக்கு பம்பர் பரிசை அறிவித்த தமிழக அரசு!
இந்த கல்வி நிறுவனங்கள் மாநில அளவிலான குழுவிற்கு பரிந்துரைக்கப்படும். அதன் பிறகு மாநில அளவில் சிறந்து விளங்கும் மூன்று குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்க அனைத்து கல்வி நிலையங்களிலும் போதைப் பொருள் எதிர்ப்பு கிளப்புகள் மற்றும் தன்னார்வ குழுக்களை உருவாக்கி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறை மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்புப் பிரிவு போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, 'போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு' திட்டத்தின்கீழ் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதை ஒழிப்பு
ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வின் போது முதல்வர் ஸ்டாலின் போதைப் பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். இதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதை ஒழிப்பு மற்றும் போதைப் பொருளால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக காவல்துறை ஏற்கனவே அனைத்து கல்வி நிலையங்களிலும் போதைப்பொருள் தடுப்பு கிளப்புகள் மற்றும் தன்னார்வ குழுக்களை அமைப்பதற்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது தமிழக அரசு அதை முறைப்படுத்தி மேம்படுத்த அரசாணை பிறப்பித்துள்ளது.
மாவட்ட, மாநிலக் குழுக்கள் அமைப்பு
இந்த கிளப்புகள் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உருவாக்கப்பட்டு அவற்றை கண்காணிக்கவும் முறைப்படுத்தவும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்ட அளவிலான குழுவில் காவல் கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அதிகாரி, கல்லூரி மண்டல இணை ஆணையர் மற்றும் மாவட்ட என்எஸ்எஸ் நிகழ்ச்சி நோடல் அதிகாரி, சுகாதாரத் துறை இணை ஆணையர் மற்றும் உறுப்பினர் செயலர் உள்ளிட்டவர்கள் இடம் பெறுவார்கள். இதேபோன்று மாநில அளவிலான குழுவில் ஏடிஜிபி, கல்லூரி கல்வி ஆணையர், பள்ளிக் கல்வித்துறை ஆணையர், என்சிசி துணை இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலர் திட்ட இயக்குனர் அடங்கிய மாநிலக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
3 குழுக்கள் விருதுக்கு தேர்வு
மாவட்ட அளவிலான குழு போதைப்பொருள் எதிர்ப்பு கிளப்புகள் மற்றும் தன்னார்வ குழுக்களை காலாண்டு மற்றும் அரையாண்டு என்ற அடிப்படையில் நடவடிக்கைகளை கண்காணிக்கும். அதில், பள்ளி, கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து சிறப்பாக செயல்படும் 3 குழுக்கள் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த கல்வி நிறுவனங்கள் மாநில அளவிலான குழுவிற்கு பரிந்துரைக்கப்படும். அதன் பிறகு மாநில அளவில் சிறந்து விளங்கும் மூன்று குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
முதல் பரிசாக ரூ.1 லட்சம்
தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வக் குழுக்களில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு, முதல் பரிசு ரூ.15 ஆயிரம், இரண்டாவது பரிசாக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் மூன்றாவது பரிசாக 5000 ரூபாய் வழங்கப்படும். மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் தன்னார்வ குழுக்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.50,000 அளிக்கப்படும்
இந்த முயற்சிகள் அனைத்தும் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் போதைப் பொருள் தொடர்பான அபாயங்களை பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் செயல்படுத்தப்பட உள்ளது.