Anbil Mahesh: 'தமிழ்நாடு'- மாணவர்களிடம் எழுதிக் காட்டிய அமைச்சர் அன்பில்; வைரலாகும் படம்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவர்களிடம் கலந்துரையாடும்போது தமிழ்நாடு என்று எழுதிக் காட்டியது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவர்களிடம் கலந்துரையாடும்போது தமிழ்நாடு என்று எழுதிக் காட்டியது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு வார்த்தை புறக்கணிப்பு
முன்னதாகக் கடந்த வாரம் சென்னை ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநிலத்தை தமிழ்நாடு என்றழைக்கப்படாமல் தமிழகம் என்றே அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், ''இந்தியா முழுவதும் எந்த ஒரு விஷயத்தை முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிப்பது வாடிக்கையாகி விட்டது. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகின்றனர். தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது'' எனவும் கூறி இருந்தார். ஆளுநரின் இந்த பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாடு என்ற வார்த்தை இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டானது.
சட்டப்பேரவையில் பரபரப்பு
நேற்றைய தினம் (ஜனவரி 9) நடப்பாண்டின் தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக THIS Government (இந்த அரசு) என தெரிவித்திருந்தார்.
அதேபோல, தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பல்வேறு கருத்துக்களை வாசிக்காமலும் பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பெயர்களைத் தவிர்த்தது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆளுநரின் செயலைக் கண்டித்து சட்டப்பேரவையில் அங்கம் வகித்த தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநருக்குக் கண்டனம்
இதற்கிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில், 2023ஆம் ஆண்டு பொங்கல் விழாவுக்காக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதேபோல் தமிழ்நாடு அரசின் இலச்சினையும் (முத்திரை) இடம் பெறவில்லை கடந்தாண்டுக்கான பொங்கல் மற்றும் சித்திரை பெருவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்றே இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை, ராயபுரம் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடும்போது தமிழ்நாடு என்று ஸ்மார்ட் பலகையில் எழுதிக் காட்டினார். இந்தப் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.