“அச்சம் வேண்டாம்; அறிவை சோதிக்க அல்ல; அடுத்தகட்ட நகர்வு” - மாணவர்களுக்கு கமல் அறிவுரை
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அரசுப் பொதுத்தேர்வுகள் உங்கள் அறிவையும் திறனையும் சோதிப்பவை அல்ல; அடுத்தகட்ட நகர்வுக்கான வழித்துணைதான் என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பொதுத் தேர்வு எழுத இருக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசுப் பொதுத்தேர்வுகள் உங்கள் அறிவையும் திறனையும் சோதிப்பவை அல்ல; அடுத்தகட்ட நகர்வுக்கான வழித்துணைதான். அச்சம் தவிர்த்து, தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். பிளஸ்-2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்.தேவையற்ற அழுத்தம் தர வேண்டாம் என்பது பெற்றோருக்கு என் வேண்டுகோள்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நாளை (13.03.2023) தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி முடிவடைகின்றனர். 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி முடிகிறது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வை வழக்கமான மாணவர்களோடு, தனித் தேர்வர்கள் 23,747 பேர், மாற்றுத் திறனாளிகள் 5,206 பேர், 90 சிறைவாசிகள் என மொத்தம் 8,36,593 பேர் தேர்வு எழுத உள்ளனர். புதுச்சேரி மாணவர்கள் 14,710 பேர் சேர்த்து, இந்த எண்ணிக்கை 8,51,303 ஆக உள்ளது. இவர்களுக்கு மொத்தம் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களைக் கண்காணிக்க 46,870 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 3,100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 405 பள்ளிகளில் இருந்து 180 தேர்வு மையங்களில் மொத்தம் 45, 982 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர்.
கவனிக்க..
தேர்வர்கள் விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா பயன்படுத்தி மட்டுமே எழுத வேண்டும். கலர் பென்சில், பேனாக்களை உபயோகிக்கக்கூடாது. மேலும் விடைத்தாளில் ஏதேனும் குறியீடு, பெயர் உள்ளிட்டவற்றை குறிப்பிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வர்களின் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள் முதன்மை விடைத்தாளுடன் இணைந்து வழங்கப்படும். அதனைச் சரிபார்த்து தேர்வர்கள் கையெழுத்து போட்டால் போதும். மேலும் அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூக்கம் முக்கியம் பாஸ்..
,மாணவர்கள் தேர்வு காலங்களில் நன்றாக உறங்க வேண்டும். புத்துணர்வோடு தேர்வுக்கு செல்ல சீரான தூக்கம் அவசியம். குறைந்த அவகாசமே இருக்கிறது என்று நேரத்துக்கு உறங்காமல், இரவு முழுக்கக் கண் விழிப்பது நல்லதல்ல. இது உடல் சோர்வுக்கு வழிவகுக்கும். போதுமான அளவில் தூங்கி எழும்பட்சத்தில் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்று, தேர்வுக்குத் தயாராகி இருக்கும். பதற்றம் ஏற்படாது.
எளிதாக செரிக்கும் வீட்டு உணவு
தேர்வு நாட்கள் மற்றும் அதற்கு இடைப்பட்ட விடுமுறை நாட்களில், எளிதில் செரிக்கும் வகையிலான, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவுகளையே எடுத்துக் கொள்ளுங்கள். வெளி உணவுகளையும், செரிக்கத் தாமதமாகும் உணவுகளையும் முடிந்த அளவு தவிர்த்து விடுவது உடல் நலனைப் பாதுகாக்கும். படிக்கும்போது அதிகம் பசிக்கும் என்பதால் கையில் சில ஆரோக்கியமான தின்பண்டங்களையும் உடன் வைத்துக் கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் பதற்றம் இல்லாமல் தேர்வு எழுத வாழ்த்துகள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.