ABP Nadu Impact: ஏபிபி நாடு செய்தி எதிரொலி: கட்டிட வசதி இல்லாத அரசு பள்ளியில் வகுப்பறை கட்டும் பணி துவக்கம்
ஏபிபி நாடு செய்தி வெளியிட்ட நிலையில் ரூ.45 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தி, பணி தொடங்கியது.
விழுப்புரம்: திண்டிவனம் அருகே உள்ள கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரே ஒரு வகுப்பறை மட்டுமே இருந்து வந்த நிலையில் ஏபிபி நாடு தொடர்ந்து செய்தி வெளியிட்ட நிலையில் ரூ.45 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டு பணி தொடங்கியது.
ஒரே ஒரு வகுப்பறையில் நடைபெற்று வரும் தொடக்கப்பள்ளி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக இருந்த நிலையில் தற்போது நல்லாமூர், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம், கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் இப்பள்ளியில் ஒரே ஒரு வகுப்பறை மட்டும்தான் உள்ளது.
அந்த ஒரே வகுப்பறையில் 54 மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் அவல நிலை உள்ளதால் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வகுப்பறையிலும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பக்கத்து வீட்டில் உள்ள மாட்டுக்கொட்டகைகளிலும், குடியிருப்புகளிலும், வீட்டின் வளாகங்களிலும் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் கிடையாது. சமையல் கூடம் இல்லாததால் சுகாதாரமற்ற முறையில் திறந்தவெளியில் சமையல் செய்து தருகின்றனர். இதுதவிர விளையாட்டு மைதானம், கழிப்பிட வசதி இப்படி எந்தவொரு அடிப்படை வசதிகளும் இப்பள்ளியில் இல்லை.
இப்படி பட்ட அவல நிலையிலும் இப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி தரத்திற்கு எந்த குறையுமில்லை இங்கு கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு ஆசிரியர்கள் இரண்டு பேர், பள்ளி மேலாண்மை குழு சார்பில் இரண்டு ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் இரண்டு பேர் என மொத்தம் ஆறு ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு முறையாக கல்வி பயிற்றுவித்து வருகின்றனர். பள்ளிக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடத்தை கட்டித்தரக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ABP NADU IMPACT : ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறை
இதுகுறித்த செய்தி தொகுப்பு ABP நாடு செய்தியில் தொடர்ந்து வெளியாகியது. இந்த நிலையில் செய்தி எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கையின் காரணமாக ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டு கட்டிடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. மேலும் இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட வழிவகை செய்த ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்தனர்.
மேலும், இப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியில் மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுகின்றனர். இப்பள்ளியில் சிலம்பம், திருக்குறள் என பல்வேறு சிறப்பு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு 6 வகுப்பு படிக்க 10 கிலோமீட்டர் கடந்து தழுதாளி பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது, எனவே தொடக்கப்பள்ளியை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டு என கோரிக்கை வைத்துள்ளனர்.