10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியா? துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம், எப்படி தெரியுமா?
TN 10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த 75,521 மாணவ, மாணவியர்கள், இன்று முதல் துணை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
TN 10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவியர்கள், துணை தேர்வுகளுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
75,521 பேர் தோல்வி:
தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அந்த தேர்வை எழுதியவர்களில் 3,96,152 மாணவர்களும், 4,22,591 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் 75,521 பேர் தோல்வியடைந்தனர். அவர்களுக்கு ஒரு முழு கல்வியாண்டு முழுவதும் வீணாகாமல் தவிர்க்கும் நோக்கில் உடனடியாக அரசு சார்பில் துணை தேர்வுகள் நடத்தப்படுகின்றனர். இதில் பங்கேற்று தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர்கள் இந்த ஆண்டிலேயே தங்களது உயர்கல்வியைத் தொடர முடியும். அதன்படி, தோல்வியடைந்த மாணவர்கள், துணைத்தேர்வில் பங்கேற்பதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜூலை 2ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத இருக்கும் பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகளில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். அதேசமயம், தனித்தேர்வர்களாக தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள், ஜூன் மாத துணைத் தேர்வுக்கு கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக (Service Centres) விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்-லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application Number) பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால், ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
நடப்பாண்டில் பள்ளி மாணவர்களின் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாட்டில் இந்த தேர்வை 8,94,264 மாணவ, மாணவியர் எழுதினர். இதில் மாணவிகளின் எண்ணிக்கை: 4,47,061 மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை: 4,47,203. தொடர்ந்து ஆசிரியர்களைக் கொண்டு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. பின்னர் மதிப்பெண் பதிவேற்றும் பணியும் நடந்து முடிந்தது. இதனிடையே திட்டமிட்டபடி பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் கடந்த ஆண்டை காட்டிலும், 0.16 சதவிகிதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. மேலும், வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். அதன்படி, மாணவர்களை விட மாணவிகள், 5.95 சதவிகிதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்று இருந்தனர். கணிதத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். மாநில அளவில் அதிக தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் முதலிடத்தையும், வேலூர் கடைசி இடத்தையும் பிடித்தது.