‘நான் ரவுடி’... பட்டா கத்தியுடன் பெண்ணுக்கு கொலை மிரட்டல் - பின்னர் நடந்த சம்பவம்..!
“ஊருக்குள் கத்தியை எடுத்துக் கொண்டு சுற்றிக் கொண்டேன். இனிமேல் கத்தியை வைத்துக் கொண்டு சுற்ற மாட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை திவான்சாபுதூர் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் குடும்பத்துடன் குடியிருந்து கொண்டு கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரிப் மகன் தீனதயாளன்( வயது 22 ) அடிக்கடி மது போதையில் வந்து கையில் பட்டாகத்தி வைத்துக் கொண்டு ‘நான் ரவுடி’ என அனைவரையும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திவான்சாபுதூர் மளிகை கடைக்கு மகேஸ்வரி சென்றுள்ளார். அப்போது அங்கே வந்த தீனதயாளன் கையில் ஒரு பட்டாகத்தி வைத்துக் கொண்டு, பொது இடத்தில் நின்று கொண்டு தகாத வார்த்தையில் பேசிக் கொண்டும், ரவுடித்தனம் செய்து கொண்டும் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கடையில் நின்று கொண்டிருந்த மகேஸ்வரி தீனதயாளனை பார்த்து ஏன் தம்பி இப்படி கத்தியை வைத்துக் கொண்டு ரவுடித்தனம் செய்து கொண்டிருக்கிறாய் பேசாமல் போ என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த தீனதயாளன் மகேஸ்வரியை தகாத வார்த்தையால் பேசி கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மகேஸ்வரி ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தீனதயாளனை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனிடையே காவல் துறையினர் முன்னிலையில் தீனதயாளன் கத்தியை வைத்துக் கொண்டு இனி மேல் சுற்ற மாட்டேன் என பேசிய வீடீயோ காட்சிகளை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் “ஊருக்குள் கத்தியை எடுத்துக் கொண்டு சுற்றிக் கொண்டேன். இனிமேல் கத்தியை வைத்துக் கொண்டு சுற்ற மாட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
கஞ்சா கடத்திய இளைஞர்கள் கைது
கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்துள்ள விளாங்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக கோவில்பாளையம் காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் காவல் துறையினர் விளாங்குறிச்சி பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை விசாரணை மேற்கொண்ட போது, இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர்ட் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையினர் விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த விகாஸ் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த அஸ்வந்த் சூர்யா என்பதும், சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், ரூ.2 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ கஞ்சா, கஞ்சா ஆயில் 40 கிராம் மற்றும் மெத்தம்பேட்டமைன் போதை மருந்து 3 கிராம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்