Crime: ஒரே பெண்ணின் மீது காதல்.. நண்பன் என்று பாராமல் கொலை செய்த இளைஞர்! நடந்தது என்ன?
சேது மணிகண்டன், அவர் வீட்டுக்கு அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அப்பெண் சேதுவிடம் இருந்து விலகி குகநாதனை காதலிக்க தொடங்கியுள்ளார்.
ஈரோடு அருகே காதலுக்காக நண்பனையே இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவருக்கு சேது மணிகண்டன் என்ற 23 வயது மகன் உள்ளார். சேது அங்குள்ள நாற்காலி தயாரிக்கும் நிறுவனத்தில் வெல்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். அதேபோல் பவானியில் உள்ள செங்காடு பகுதியில் வசிக்கும் ஹரிஹரன் என்பவருடைய மகன் குகநாதன் தள்ளுவண்டியில் காளான் கடை நடத்தி வருகிறார். சேது மணிகண்டனும், குகநாதனும் நண்பர்கள் ஆவார்கள்.
இதற்கிடையில் சேது மணிகண்டன், அவர் வீட்டுக்கு அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் முதலில் காதலித்த நிலையில், பின் அப்பெண் சேதுவிடம் இருந்து விலகி குகநாதனை காதலிக்க தொடங்கியுள்ளார். இப்படியான நிலையில் நேற்று முன்தினம் அப்பெண்ணுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. தான் காதலித்த பெண் என்பதால் சேது தன்னுடைய செல்போனில் உள்ள வாட்ஸ் அப் செயலியில் அப்பெண்ணின் புகைப்படத்தை வைத்து வாழ்த்து சொன்னதாக கூறப்படுகிறது.
இதேபோல் குகநாதனும் போட்டோ வைத்து அந்த பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த சேது மணிகண்டன் குகநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே கோபத்தில் குகநாதன் அங்கிருந்து சென்று விட்டார். இதனிடையே அன்றைய இரவு பவானி அரசு மருத்துவமனை அருகே சேது நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குகநாதன் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கடும் கோபமடைந்த குகநாதன் தான் மறைத்து வைத்த கத்தியை எடுத்து சேது மணிகண்டனின் மார்பு மற்றும் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் நிலைகுலைந்து போன சேது ரத்த வெள்ளத்தில் அலறியபடி கீழே விழுந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சேதுவை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனடியாக இந்த கொலை சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து குகநாதனை கைது செய்தனர்.