’குரூப் 4 தேர்வும் சரியாக எழுதல... வேலையும் போனது... ’ - 10 வயது மகளை கொன்று இளம்பெண் தற்கொலை
மகள் வர்ஷா உடன் பூங்கொடி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த வர்ஷாவை தூக்கில் தொங்கவிட்டு, சேலையால் தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குரூப் 4 தேர்வு சரியாக எழுதவில்லை, இருந்த வேலையும் பறிபோன விரக்தியில் தனது மகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியம் காமராஜர் நகரை சேர்ந்தவர் பூங்கொடி. 28 வயதான இவரது கணவர் பெயர் காளிதாஸ். காளிதாஸ் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் நூற்பாலை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அலங்கியம் பகுதியில் பூங்கொடியின் தாய் சரஸ்வதி மற்றும் தனது பத்து வயது மகள் வர்ஷா உடன் பூங்கொடி வசித்து வந்தார்.
தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் பூங்கொடி வேலை செய்து வந்தார். அவரது மகள் வர்ஷா அலங்கியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே பூங்கொடி கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து கடந்த 24 ம் தேதியன்று மூலனூரில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வை பூங்கொடி எழுதியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர் தேர்வில் கேள்விகள் கடினமாக இருந்ததாக கூறியுள்ளார்.
தேர்வுக்கு தயாராகவதற்காக இருந்த வேலையையும் இழந்து விட்டதாகவும், குடும்ப வருமானத்திற்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை எனவும் அக்கம்பக்கத்தினரிடம் பூங்கொடி புலம்பியதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை மகள் வர்ஷா உடன் பூங்கொடி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த வர்ஷாவை தூக்கில் தொங்கவிட்டு, சேலையால் தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சரஸ்வதி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது மகள் பூங்கொடியும், பேத்தி வர்ஷாவும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த அலங்கியம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தாய், மகள் இருவரது சடலங்களையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குரூப் 4 தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் மகளைக் கொன்று, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்