PT சாருடன் கள்ளக்காதல்.. கணவனை கொல்ல கூலிப்படை.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. மாட்டிய மனைவி!
2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சௌமியாவும் திலீப்பும் சேர்ந்து ரமேஷைக் கொல்ல முயன்றனர். ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திலீப் தனது காரை கொண்டு மோதி விபத்து போல செட்டப் செய்தார்.

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை மனைவி கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது நிஜாமாபாத் மாவட்டம் மக்லூர் மண்டலத்தின் போர்கான் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்களுக்கே தலைசுற்ற வைக்கும் அளவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அதனைப் பற்றி நாம் காணலாம்.
கடந்த 2012ம் ஆண்டு போர்கான் கிராமத்தைச் சேர்ந்த பல்லட்டி ரமேஷ் மற்றும் சௌமியா ஆகிய இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இந்த நிலையில் கடந்த 2025, டிசம்பர் 20ம் தேதி திடீரென ரமேஷ் தனது வீட்டில் இருந்தபோது மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்களுக்கு சௌமியா தகவல் தெரிவித்தார். கணவனை இழந்த துக்கத்தில் அவர் கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. அதேசமயம் அவசரமாக இறுதிச் சடங்குகளை செய்த சௌமியா, ரமேஷின் மரணத்திற்கு தொடர்ந்து தான் துக்கத்தில் இருப்பது போல காட்டி வந்துள்ளார்.
இதற்கிடையில் ரமேஷின் மரணம் குறித்த முதல் சந்தேகம் இஸ்ரேலில் வசிக்கும் அவரது தம்பி கேதாரிக்கு எழுந்தது. போர்கான் கிராமத்தைச் சேர்ந்த சில உள்ளூர் மக்கள் ரமேஷின் உடலிலும், கழுத்திலும் காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கேதாரி டிசம்பர் 21ம் தேதி வெளிநாட்டிலிருந்து போர்கான் கிராமத்திற்கு வந்தார். பின்னர் அங்குள்ள மேக்லூர் காவல்துறையினரை அழைத்து புகாரளித்தார். தனது சகோதரனின் மரணத்திற்குப் பின்னால் ஏதோ சதி இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார் ஜனவரி 2ம் தேதி தாசில்தார் முன்னிலையில் ரமேஷின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதில் அவர் இயற்கையாக மரணம் அடையவில்லை என்பது தெரிந்தது. மூச்சுத் திணறல் காரணமாக இந்த கொலை நடந்ததை போலீசார் கண்டறிந்தனர். உடனடியாக அவர்களின் சந்தேகப் பார்வை சௌமியா பக்கம் திரும்பியது. அவரை கைது செய்து போலீசார் விசார்ணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
நிஜாமாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சௌமியா தற்காலிக ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அதே பள்ளுயில் நந்திபேட் மண்டலத்தின் பட்குனாவைச் சேர்ந்த நலேஷ்வர் திலீப் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இவர்களின் உறவு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் ரமேஷூக்கு இந்த விஷயம் தெரிய வந்ததும் சண்டை வெடித்தது. தனது மகிழ்ச்சிக்கு கணவர் ரமேஷ் தடையாக இருப்பதை உணர்ந்த சௌமியா அவரை தீர்த்துக்கட்ட தனது காதலன் நலேஷ்வர் திலீப் உடன் இணைந்து திட்டமிட்டார்.
அதன்படி 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சௌமியாவும் திலீப்பும் சேர்ந்து ரமேஷைக் கொல்ல முயன்றனர். ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திலீப் தனது காரை கொண்டு மோதி விபத்து போல செட்டப் செய்தார். ஆனால் அதில் ரமேஷ் இலேசான காயங்களுடன் தப்பினார். இதனைத் தொடர்ந்து சௌமியா கூலிப்படை உதவியை நாட முடிவு செய்தார்.
தனது தங்க மோதிரத்தை 35 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து கூலிப்படையை ஏற்பாடு செய்தார். டிசம்பர் 19ம் தேதி கூலிப்படை அறிவுறுத்தலின்படி தண்ணீரில் 10 தூக்க மாத்திரைகளை கலந்து ரமேஷூக்கு சௌமியா கொடுத்தார். உடனடியாக அவரை கொல்ல வருமாறு கூலிப்படைக்கு போன் செய்திருக்கிறார். ஆனால் அந்த கும்பலை சேர்ந்த யாரும் போன் எடுக்கவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த அவர் திலீப்பிற்கு தகவல் தெரிவித்தார். திலீப் தனது சகோதரன் அபிஷேக் உடன் வந்து சௌமியா வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தூங்கி கொண்டிருந்த ரமேஷின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கியுள்ளனர். அவரது முகத்தை தலையணையால் அழுத்தினர். இதில் துடிதுடித்து சௌமியா கண்முன்னே ரமேஷ் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சௌமியா, திலீப், அபிஷேக், ஜிதேந்தர், ஸ்ரீராம் மற்றும் ராமாவத் ராகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மௌஹ்சின் என்ற குற்றவாளி தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.





















