ரீசார்ஜ் செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம்...ரூ.1¾ லட்சத்தை இழந்த வாலிபர்
விழுப்புரம் : திண்டிவனம் அருகே நூதன முறையில் வாலிபரிடம் ரூ.1¾ லட்சத்தை மோசடி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள உப்புவேலூரை சேர்ந்தவர் விக்ரம் (வயது 23). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருடைய செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர், பகுதிநேர வேலை விஷயமாக ஒரு லிங்கை அனுப்பினார். இதைப்பார்த்த விக்ரம், அந்த லிங்கிற்குள் சென்று தனக்கென பயனாளர் முகவரி, பாஸ்வேர்டு பதிவு செய்தார். பின்னர் டெலிகிராம் ஐடியில் இருந்து தொடர்புகொண்ட நபர், விக்ரமிடம் நீங்கள் சிறிய தொகையை ரீசார்ஜ் செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார்.
இதை நம்பிய விக்ரம், தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட போன்பே மூலம் ரூ.100 செலுத்தி ரூ.221-ஆக லாபம் பெற்றுள்ளார். பின்னர் ரூ.500-ஐ இரு தவணைகளாக செலுத்தி ரூ.1,254-ஐ லாபமாக பெற்றார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து விக்ரம், தனது போன்பே, பேடிஎம், கூகுள்பே மூலமாக ரூ.1,60,259-ஐயும் மற்றும் தனது நண்பர் வெங்கடேசின் கூகுள்பே மூலம் ரூ.3,840-யும், மற்றொரு நண்பரான சரத்சந்திரனின் கூகுள்பே மூலம் ரூ.20,299-யும் ஆக மொத்தம் ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 398-ஐ 28 தவணைகளாக அனுப்பியுள்ளார். ஆனால் பணத்தை பெற்ற மர்ம நபர், விக்ரமுக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.
இதுகுறித்து விக்ரம், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் பூங்கோதை, உதவி ஆய்வளர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். நூதன முறையில் வாலிபரிடம் டெலிகிராம் மூலம் ரூ.1¾ லட்சத்தை மோசடி செய்த சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்