பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி பொருட்கள் விற்பனை - அதிர்ச்சியில் மக்கள்
மளிகை கடைகளில் அன்றாட வாழ்விற்கு தேவைப்படும் உணவு பொருட்களும் போலியாக விற்பனை செய்வது பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
செஞ்சியில் பிரபல டீ தூள், துணி பவுடர் நிறுவன பெயரில் போலியான டீ தூள் பாக்கெட்டுகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மளிகை கடைகள் செயல்பட்டு வருகின்றன. செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்கள் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் மற்றும் வெளியூருக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் என செஞ்சி பகுதியில் உள்ள மளிகை கடைகளில் பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் செஞ்சி பகுதியில் உள்ள மளிகை கடையில் போலியான மளிகை பொருட்கள் கள்ளச் சந்தையில் வாங்கி வந்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த வந்த நிலையில் பிரபல டீத்தூள் நிறுவனமான 3 ரோசஸ் என்ற பெயரில் போலியாக 500 கிராம் எடை கொண்ட பாக்கெட்டுகள் மற்றும் துணி துவைப்பதற்கு பயன்படுத்தப்படும் சர்ப் எக்ஸ்எல் மற்றும் ரின் பவுடர் போன்றவையும் போலியான பாக்கெட்டுகள் தயாரிப்பு செய்து விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் மளிகை கடைகளில் அன்றாட வாழ்விற்கு தேவைப்படும் உணவு பொருட்களும் போலியாக விற்பனை செய்வது பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எனவே உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செஞ்சி பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு இதுபோன்று போலியான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருட்களை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செஞ்சி பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் செஞ்சி அடுத்த அனந்தபுரம் பகுதியில் உள்ள மளிகை கடையில் 7-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் தன்னுடைய பிறந்தநாளுக்காக சக மாணவர்களுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்த நிலையில் அதை சாப்பிட்ட 12 மாணவர்களுக்கு தலைவலி மற்றும் வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் 4 மாணவர்கள் மயக்கம் அடைந்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.