மேலும் அறிய
செஞ்சி அருகே காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் - 4 இளைஞர்கள் கைது
வாலிபர்கள் மது போதையில் இருந்த நிலையில், சீருடையில் இருந்த உதவி ஆய்வாளரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது.

காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்
விழுப்புரம்: செஞ்சி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சிங்கவரம் கிராமத்தில் அமைந்துள்ள அரங்கநாதர் கோயில் மலையடிவாரத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு செஞ்சி பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சாமி கும்பிட இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் இருந்த சிங்கவரம் சேர்ந்த வாலிபர்களுக்கும் செஞ்சியை சேர்ந்த வாலிபர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு பின்னர் மோதலாக மாறிய நிலையில், தகவலின் பேரில் செஞ்சி காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோதலை தடுக்க முயன்ற போது சிங்கவரம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மது போதையில் இருந்த நிலையில், சீருடையில் இருந்த உதவி ஆய்வாளரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை மீட்டு செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் சிங்காரம் கிராமத்தை சேர்ந்த ராஜதேவன், எழிலரசன், கவியரசன், இளமதிவானன் ஆகிய நான்கு பேர் மீது உதவி ஆய்வாளரை தாக்குதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் என 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர்.
இதனிடையே சிங்கவரம் பகுதியில் வாலிபர்கள் சிலர் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் செஞ்சி சுற்றுவட்டார பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















