விழுப்புரத்தில் பாமக நிர்வாகி படுகொலை... 4 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே பாமக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே பாமக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவர், பாமக மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அதே பகுதியில் சாலையோரம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதியினர் இச்சம்பவம் குறித்து விக்கிரவாண்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இறந்தவர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, நடந்த சம்பவம் குறித்து, தீவிர விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக, விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பாமக நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.