விழுப்புரம் அரசு பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! ஆங்கில பாட ஆசிரியர் கைது... பெற்றோர்கள் கொந்தளிப்பு!
விழுப்புரம் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பால் வின்சென்ட் கைது.

விழுப்புரம்: விழுப்புரம் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பால் வின்சென்ட் கைது, பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆறாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டல்
விழுப்புரம் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிகள் மூன்று பேரிடம் ஆங்கில பாடம் எடுக்கும் இடைநிலை ஆசிரியர் பால் வின்சென்ட் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மூன்று பேரும் நேற்று மாலை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். மாணவிகளின் புகார் குறித்து தலைமை ஆசிரியர் குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் அளித்த நிலையில் குழந்தை நல அமைப்பினர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணை நடத்திய நிலையில், குழந்தைகள் நல அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ஆசிரியர் பால் வின்சென்ட்டை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையின் பேச்சு வார்த்தை தொடர்ந்து பெற்றோர் கலைந்து சென்றனர்.
உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
கடந்த வாரம், இதேபோல் விழுப்புரத்தில் அரசு பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் விழுப்புரம் அருகே பானாம்பட்டு பாதையைச் சேர்ந்த ஆதி(எ)சிவபாலன்(48) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்று வருகிறார். இந்நிலையில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை உடற்கல்வி பாட இடைவேளையின்போது விளையாட்டு மைதானத்திற்கு பகுதி நேர ஆசிரியர் சிவபாலன் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கு மாணவிகளின் கண்களை கட்டி விளையாட சொல்லி உள்ளாராம்.
அப்போது சில மாணவிகளிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரும் பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அதில் பகுதிநேர ஆசிரியர் சிவபாலன் மீதான சில்மிஷ புகார் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் சிவபாலனை போக்சோ சட்டத்தில் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து விசாரணைக்கு பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கையும், களவுமாக பிடித்த தலைமை ஆசிரியர், கைது செய்யப்பட்ட பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் சிவபாலன் மீது ஏற்கனவே மாணவிகள் சிலர் தவறான தொடுதலில் ஈடுபடுவதாக அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் உடற்கல்வி ஆசிரியர் நடவடிக்கையை அவருக்கு தெரியாமல் தலைமை ஆசிரியர் கண்காணித்து வந்துள்ளார். அப்படித்தான் அன்றும் விளையாட்டு மைதானத்திற்கு மாணவிகளை அழைத்துச் செல்லும்போது அவருக்கு தெரியாமல் மறைந்திருந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதை தலைமை ஆசிரியரும், மேலும் சில ஆசிரியர்களும் நேரில் பார்த்து அவர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்துள்ளனர். அதன் பிறகு தான் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















