Crime: காளி கோயிலில் நள்ளிரவில் பூஜை செய்ய வந்த சாமியார்.. கத்தியால் குத்தி வயிற்றை கிழித்த இளைஞர்.. காரணம் என்ன?
செஞ்சி அருகே தோஷம் கழிக்க காளி கோயிலில் நள்ளிரவு பூஜைக்கு வந்த சாமியாரை வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி-தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பெருங்காப்பூர் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள மலை அடிவார மாந்தோப்பு பகுதியில் காளி கோயில் அமைந்துள்ளது.இந்த காளி கோயிலில் அமாவாசை மற்றும் பெளர்ணமி தினத்தில் நடைபெறும் பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
ரத்த வெள்ளத்தில் சாமியார்:
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை காளி கோயில் அருகே உள்ள மாந்தோப்பில் சாமியார் ஒருவர் வயிற்று பகுதியில் படுகாயம் அடைந்து குடல் சரிந்து கிடப்பதை கண்ட அக்கிராம விவசாயிகள் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து சாமியாரை மீட்டு செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு படுகாயம் அடைந்த சாமியாருக்கு முதலுதவி சிக்கிச்சை அளிக்கப்பட்டு மேல் சிக்கிச்சைக்காக முண்டியம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சாமியார் அனுப்பி வைக்கப்பட்டார்.
நள்ளிரவு பூஜை:
இதுகுறித்து தகவல் அறிந்த செஞ்சி டிஎஸ்பி கவினா தலைமையிலான சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்க்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் படுகாயம் அடைந்த சாமியார் பெயர் சரவணன்(43) என்கிற ஸ்ரீ ஸ்ரீ இஸ்தானந்தா சுவாமிகள் என்றும், இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆயமலை புதூர் பகுதியில் ஸ்ரீ ஸ்ரீ நிஜகாளி கெளரியம்மன் என்ற பெயரில் அருள்வாக்கு, ஜாதகம் பார்த்தல், வசியம் மற்றும் மாந்திரீகம் செய்து வந்தும் தெரியவந்தது.
மேலும் பெருங்காப்பூர் பகுதியில் உள்ள காளி கோயிலில் நள்ளிரவு பூஜை செய்ய வேண்டும் என மர்ம நபர்கள் செல்போனில் அழைத்ததின் பேரில் ஸ்ரீ ஸ்ரீ இஸ்தானந்தா சாமியார் நேற்று இரவு பெருங்காப்பூர் காளி கோயிலுக்கு வந்த போது மர்ம நபர்கள் வயிற்றில் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அப்போது குடல் சரிந்து சாமியார் கீழே விழுந்த நிலையில் சாமியார் உயிரிழந்து விட்டதாக நினைத்து சாமியாரின் செல்போனை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டதாகவும் தெரியவந்தது. இச்சம்பவம் செஞ்சி சுற்றுவட்டார பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொலை முயற்சி:
இதனிடையே ஸ்ரீஸ்ரீ இஸ்தானந்தா சாமியாரை திட்டம் போட்டு வரவழைத்து கொலை செய்ய முயற்சி நடைப்பெற்றதா? அல்லது பூஜை செய்யும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்ப்பட்டு சாமியாரை கொலை செய்ய முயற்சி நடந்ததா? சாமியார் நள்ளிரவில் எது போன்ற பூஜை செய்ய வந்தார் ?சாமியாரை செல்போனில் பூஜைக்கு அழைத்தது யார்? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வந்தனர்.
சத்தியமங்கலம் போலீசாரின் தீவிர விசாரணையில் செஞ்சி அடுத்த ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்த திருமலை(35) என்பவர் தான் சாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தது தெரிவந்தது. மேலும் மேல்அத்திபாக்கம் பகுதியில் உள்ள காளி கோயில் அருகே பதுங்கி இருந்த திருமலையை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
நடந்தது என்ன?
இதனை அடுத்து திருமலையிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டதில் இஸ்தானந்தா சாமியாரிடம் 6 மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகி எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று திருமலை ஜாதகம் பார்த்துள்ளார். அப்போது திருமலை இடம் சாமியார் இஸ்தானந்தா உனக்கு தோஷம் இருப்பதாகவும் அதற்கு காளி கோயிலில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்றும் பூஜையை முடித்து விட்டால் நானே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பதாக கூறி சுமார் 3 லட்சம் வரை சாமியார் வாங்கியதாகவும் ஆனால் 6 மாதங்களாக பூஜை செய்யாமல் அலைகழிப்பு செய்து வந்ததாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திருமலை சாமியார் இஸ்தானந்தாவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்துள்ளார்.
திருமலையின் தொல்லை அதிகமானதால் பூஜை செய்ய செஞ்சி அருகே உள்ள காளி கோயிலை தேர்வு செய்யும்படி சாமியார் கூறியுள்ளார். அதன்படி பெருங்காப்பூர் வனப்பகுதியை ஒட்டி உள்ள மலை அடிவார மாந்தோப்பில் அமைந்துள்ள காளி அம்மன் கோயிலுக்கு கடந்த ஆகஸ்டு 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சாமியார் இஸ்தானந்தாவை இருசக்கர வாகனத்தில் திருமலை அழைத்து சென்றதாகவும் அங்கு பூஜை செய்ய திருமலையிடம் சாமியார் இஸ்தானந்தா மேலும் பணம் கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்ப்பட்டுள்ளது.
அப்போது திருமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாமியார் இஸ்தானந்தா வயிற்றில் குத்தியதில் குடல் சரிந்து சாமியார் மயங்கி விழுந்ததாகவும் அவர் இறந்துவிட்டார் என நினைத்து சாமியார் செல்போனை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டதாகவும் திருமலை போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருமலை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த செய்த சத்தியமங்கலம் காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.