இன்ஸ்டாகிராம் காதல்... பாலியல் சீண்டலில் சிக்கிய சிறுமி... 4 இளைஞர்களை கைது செய்த போலீஸ்
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது
விழுப்புரம்: திண்டிவனம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இன்ஸ்டாகிராம் காதல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே (13) வயது எட்டாம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவர் தனது தந்தையை இழந்த நிலையில், தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டிவனம் அருகே ஊரல் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகன் முரளி (23) ,ஜானகிராமன் என்பவரது மகன்கள் தனசேகர் (20), திருநாவுக்கரசு (21) மற்றும் பிரதாபன் என்பவரது மகன் பிரகலாதன் (21) ஆகிய நான்கு பேரிடமும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததாக கூறப்படுகின்றது.
பாலியல் சீண்டலில் சிக்கிய சிறுமி
இந்நிலையில், இந்த இளைஞர்கள் சிறுமி இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அந்த பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி வரவழைத்து தனித் தனியாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து சிறுமியின் தாய் ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது குறித்து ரோசனை போலீசார் விசாரணை மேற்கொண்டு திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்த வாலிபர்களை அனுப்பி வைத்தனர்.
4 இளைஞர்கள் கைது
இந்நிலையில், இதுகுறித்து விசாரணை செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கிருபாலட்சமி தலைமையிலான உதவி ஆய்வாளர் ராதா மற்றும் போலீசார் 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன் அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டிவனம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 13 வயது பள்ளி மாணவியிடம் தனித் தனியாக பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ள இச்சம்பவம் இப்பகுதியில் உள்ள பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தினமும் கண்காணிக்க வேண்டும், செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தகுந்த காரணங்களுக்கு மட்டுமே செல்போனை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் கருத்து தெரிவித்து வருகின்றனர்.