காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை - 7 பேருக்கு ஆயுள் தண்டனை..!
காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
வாலிபர் கொலை வழக்கில் 7 பேருக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. விழுப்புரம் அடுத்த ஆனாங்கூரைச் சேர்ந்தவர் சரவணன் மகன் கோபி (வயது 19). இவரது உறவினர் கலியமூர்த்தி என்பவரின் மகளை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபால் மகன் லட்சுமணன்(வயது 34) என்பவர் காதலித்துள்ளார். இதை கோபி மற்றும் அவரது சித்தப்பா சங்கர் மகன்களான ராஜேஷ், ராஜபிரபு ஆகியோர் கண்டித்துள்ளனர். இதனால், சங்கர் மற்றும் சரவணன் குடும்பத்திற்கும், லட்சுமணன் தரப்பினருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு, சங்கர் குடும்பத்தினர் சரவணன் வீட்டிற்கு வந்தனர். இதனைப் பார்த்த லட்சுமணன், அவரது அண்ணன் நாகராஜ், 35; மற்றும் நண்பர்கள் வெங்கடேஷ், 35; மணி, 34; சரண், 34; பாபு, 34; அய்யப்பன், 38; ஆகியோர் சேர்ந்து பில்லுார் டாஸ்மாக் கடையில் சரவணன் அல்லது சங்கர் குடும்பத்தில் யாரையாவது கொலை செய்ய வேண்டும் என திட்டம் தீட்டினர்.
பள்ளி கழிவறையை சுத்தம் செய்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் - வைரலாகும் புகைப்படம்
பின், அன்று பிற்பகல் 3:00 மணிக்கு சரவணன் வீட்டில் அத்துமீறி நுழைந்து கோபி, ராஜேஷ், ராஜபிரபுவையும் சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த கோபி, புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 2014ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின், உடல் நிலை பாதிக்கப்பட்டு அதே ஆண்டு அக்டோபர் 2ம் தேதி அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபி, 5ம் தேதி இறந்தார்.
இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து லட்சுமணன் உட்பட 7 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) வெங்கடேசன், குற்றம் சாட்டப்பட்ட லட்சுமணன், நாகராஜ், வெங்கடேஷ், மணி, சரண், பாபு, அய்யப்பன் ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்