Crime: வீட்டை பூட்டிக்கொண்டு 3 நாள்கள் பில்லி சூனிய பூஜை... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்களின் அதிர்ச்சி செயல்... கிராம மக்கள் பீதி!
ஆரணி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு நபர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு பில்லி சூனிய பூஜை செய்ததால் கிராம மக்கள் பீதியடைந்து காவல்துறையினருக்கு புகார் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சிக்கு உட்பட்ட தசராப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தவமணி வயது (65), இவருடைய மனைவி காமாட்சி வயது (55). இந்தத் தம்பதியினருக்கு பூபாலன் வயது (30), பாலாஜி வயது (28) என்ற 2 மகன்களும் கோமதி என்ற மகளும் உள்ளனர்.
இதில் பூபாலன் ராமநாதபுரம் மாவட்டம் அதே பகுதியை சேர்ந்த காளிப்பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதன் பிறகு இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். மேலும் இருவரும் சென்னையில் காவலராக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் மகள் கோமதிக்கும் அரியப்பாடி கிராமத்தை சேர்ந்த மின்சாரதுறை பணியாளர் பிரகாரன் என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் கோமதி திருமணம் நடைப்பெற்ற பிறகு சில நாட்களில் மனநிலை பாதிக்கப்பட்டது போன்று நடந்துள்ளார்.
கோமதியின் வீட்டின் அருகே இருந்த நபர்கள் கோமதிக்கு பேய் பிடித்ததாக கணவர் பிரபாகரனிடம் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அவர் கோமதியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு கோமதிக்கு பேய் பிடித்துருப்பதாகவும் இதனால் காளியம்மன் சிறப்பு மாந்தரீகம் பூஜையை செய்ய தவமணி என்பவர் உள்ளிட்ட தங்கள் குடும்பத்தை சேர்ந்த 6 நபர்களுடன் இணைந்து கடந்த 3 நாட்களாக வீட்டை பூட்டி கொண்டு மாந்தரீகம் செய்து கொண்டிருந்தாகக் கூறப்படுகிறது.
மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் தவமணி குடும்பத்தினரை அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் வெளியே வராததால் பொதுமக்கள் சந்தேகமடைந்து கோமதியின் கணவர் பிரகாரன் உறவினர் மூலம் வீட்டைத் திறக்க முயன்றுள்ளனர். தொடர்ந்து பிரகாரன் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் தவமணி வீட்டிற்கு சென்று கதவை திறக்க முயன்ற போது, வீட்டின் உள்ளே இருந்து யாரும் வெளியே வரவில்லை.
இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுஅதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ளே இருந்த 6 நபர்களிடமும் காவல்துறையினரும் உறவினர்களும் பேச்சுவார்த்தைக்கு முயன்றுள்ளனர்.
எனினும் அவர்கள் யாரும் வெளியே வரவில்லை. தொடர்ந்து ஜே.சி.பி இயந்திரம் மூலம் வீட்டை முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று ஆறு நபர்களையும் ஆரணி தாலுக்கா காவல் நிலைய காவல்துறையினர் அதிரடியாக மீட்டனர்.
வெளியே வந்த 6 நபர்களும் பேய் பிடித்து போன்று நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் வெளியே வந்த நபர்களிடம் காவல்துறையினர் விசாரிக்கையில் தங்கள் குடும்பத்துக்கு யாரோ மாந்தரீகம் வைத்ததாகவும் , அதனால் பூஜை செய்து வந்ததாகவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தவமணி குடும்பத்தினர் 6 நபர்களையும் ஆரணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அந்த கிராமத்தில் காட்டுத் தீ போல் பரவி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.