மயான ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தொழிலாளி மரணம் - சோகத்தில் கிராம மக்கள்...!
மயானத்திற்கு செல்லும் வழி ஆக்கிரம்பிக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மயங்கிவிழந்து உயிரிழந்தார். இதையடுத்து பேச்சுவார்த்தைக்குச் சென்ற மாவட்ட ஆட்சியரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கரூர் அடுத்த வேடிச்சிபாளையத்தில் ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு சொந்தமான மயானத்துக்கு செல்லும் பாதையை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஆக்கிரமிப்பை அகற்றி, மயானத்துக்கு சாலை வசதி செய்து தரவேண்டும் எனக்கூறி கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி வாயிலாக நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு அப்பகுதியினர் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். இதையடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள் வேடிச்சிபாளையம் ஆதிதிராவிடர் காலனிக்குச் சென்று மயானத்துக்குச் செல்லும் பாதையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மயானத்துக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்தவர்கள், அப்பகுதியில் விவசாயம் செய்வதற்காக வரப்பு வெட்டியதால் ஆதிராவிடர் காலனி கிராம மக்கள் மயானத்துக்குள் விடிய, விடிய காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மண்மங்கலம் வட்டாட்சியர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, பிரச்னைக்கு முழுமையான தீர்வு கிடைத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கிராம மக்கள் கூறியதால், வட்டாட்சியர் நள்ளிரவில் அங்கிருந்து சென்று விட்டார்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதேப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வேலுசாமி (45) என்பவருக்கு திங்கள்கிழமை காலை 10 மணியளவில் திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உடனே அவரை கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த ஆதி திராவிடர் காலனி மக்கள் அனைவரும் மயானப்பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச்சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராம மக்கள் ஆட்சியர் உள்ளிட்டோரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அப்பகுதியினர் மயானத்துக்குச் செல்ல நிரந்தரமான பாதை வேண்டும். ஆக்கிரமிப்பை உடனே அகற்றி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினர். உங்களது கோரிக்கையை நிறைவேற்றித்தருகிறோம் என ஆட்சியர் கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் மாலை அந்த பாதையில் சரிசெய்த மாவட்ட நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளி வேலுசாமியை அப்பகுதி ஆதிதிராவிட பொதுமக்கள் மயானத்தில் சென்று அடக்கம் செய்தனர்.கரூர் அருகே மயானத்துக்கு போராட்டம் நடத்தி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.