VAO Murder Case: தூத்துக்குடி வி.ஏ.ஓ-வை வெட்டிக் கொன்ற வழக்கு - 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடியில் வி.ஏ.ஓ வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மணற்கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேருக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடியில் வி.ஏ.ஓ வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மணற்கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேருக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குற்றம் நடந்த ஐந்தே மாதங்களில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலரான (வி.ஏ.ஓ) லூர்து பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 25ம் தேதி தனது அலுவலகத்திலேயே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்றம், மணல் கொள்ளையர்கள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்துவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இருவருக்கும் தலா ரூ.3000 அபராதமும் விதித்துள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசைபாண்டியாபுரத்தைச் சேர்ந்த யேசுவடியான் மகன் லூர்து பிரான்சிஸ் (53). இவர் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அலுவலகத்துக்குள் வந்த 2 நபர்கள், திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்த நிலையில் 2 நபர்களும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லூர்து பிரான்சிஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி லூர்து பிரான்சிஸ் உயிரிழந்தார்.
விசாரணையில், முறப்பநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் காவல் துறையினரிடம் தொடர்ந்து வாய்மொழியாக புகார் அளித்து வந்துள்ளார். ஆனால், அவரது புகார் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு மற்றும் சிலர் தாமிரபரணி ஆற்றில் மணல் திருடிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதைதொடர்ந்து, ராமசுப்பு மற்றும் அவரது உறவினரான மாரிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்குள் புகுந்து லூர்து பிரான்சிஸை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதை நீதிமன்றமும் உறுதி செய்து குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனிடயே, கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.