Crime: "இன்னும் 39 முறை சுட்டுருவேன்" - ஆசிரியரை காலில் சுட்ட மாணவர்கள் மிரட்டல்... உ.பியில் ஷாக்!
உத்தர பிரதேச மாநிலத்தில் 2 மாணவர்கள், ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Crime: உத்தர பிரதேச மாநிலத்தில் 2 மாணவர்கள், ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மட்டுமின்றி, ஒருவரைக்கொருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அதிலும், குறிப்பாக வடமாநிலங்களில் நினைத்துக் கூட பார்க்காத அளவுக்கு குற்றங்கள் நடைபெற்று வருகிறது. அதிலும், துப்பாக்கி கலாச்சாரம் அங்கு தலைதூக்கி உள்ளது.
ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவர்கள்:
இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் தொடர்ந்து நடைபெறுகிறது. சமீபத்தில் கூட, பீகார் மாநிலத்தில் பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில் உள்ள மலுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், இவர், பள்ளியில் தனது பணியை முடித்தபிறகு, மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று, இவர் பள்ளி முடிந்து சிறிது நேரம் ஓய்வுயெடுத்த பின், பயிற்சி வகுப்பு சென்றார். பயிற்சி வகுப்பு நடத்திக் கொண்டிருந்த இவரை, இரண்டு மாணவர்கள் வெளியே அழைத்துள்ளனர். ஆசிரியர் சுமித் என்ன விஷயம் என்று கேட்க, வெளியே வாருங்கள் என்று இரண்டு மாணவர்கள் கூறியுள்ளனர். இதனால், ஆசிரியர் சுமித்தும் பாடங்களை நடத்துவதை நிறுத்திவிட்டு, பயிற்சி வகுப்புக்கு வெளியே வந்திருக்கிறார்.
அப்போது, அந்த இரண்டு மாணவர்களும் ஆசிரியர் சுமித்தின் காலில், துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் அலறிதுடித்து ஆசிரியர் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார். ஆசிரியரை சுட்ட இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து, துப்பாக்கிச் சத்தத்தை கேட்ட மாணவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியே வந்தனர். அங்கு, ஆசிரியர் சுமித் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது.
வீடியோ வெளியிட்டு மிரட்டல்:
இதற்கிடையில், ஆசிரியரை சுட்ட மாணவர்கள் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அதில், ”நாங்கள் கேங்ஸ்டர். ஆசிரியரை மீண்டும் சுடுவதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு தாங்கள் திரும்பி வருவோம். 6 மாதங்களுக்கு பிறகு ஆசிரியரை கொலை செய்வோம். அவரை நாங்கள் 39 முறை சுட வேண்டும். 39 தோட்டக்கள் உள்ளது" என்று பகிரங்கமாக வீடியோவை வெளியிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு மாணவர்களை கைது செய்தனர். கைதானவர்கள் தருண் மற்றும் உத்தம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.