UP Crime: தாயை துப்பாக்கியால் சுட்டும், மனைவியை சுத்தியலால் அடித்தும், 3 பிள்ளைகளை மாடியில் இருந்து வீசியும் கொலை - உபியில் ஷாக்
UP Crime: உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நபர் தாய், மனைவி மற்றும் 3 பிள்ளைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
UP Crime: உத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் தொடர்பாக காவால்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
குடும்ப நபர்களை கொடூரமாக கொன்ற நபர்:
உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை கொடூரமாக கொலை செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தாய், மனைவி, 3 குழந்தைகள் கொலை:
சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலபூர் என்ற கிராமத்தில் தான் இந்த கோர சம்பவம் அரங்கெறியுள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொலை செய்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்படுகிறது. முதலில் அவர் தனது தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். பிறகு தனது மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்றுள்ளார். பின்னர் தனது மூன்று குழந்தைகளையும் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார். இதில் படுகாயமடைந்த 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இப்படி குடும்பத்தில் இருந்த 5 பேரையும் அடுத்தடுத்து கொலை செய்த அந்த நபர், இறுதியாக தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் மதுவுக்கு அடிமையானவர் என்றும், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
யார் அந்த 6 பேர்?
இதுதொடர்பாக பிடிஐ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், " பாலாபூர் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய அனுராக் சிங் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரைக் கொன்றதாகக் கூறப்படும் தகவல் கிடைத்தது. விசாரணையில், 40 வயதான தனது மனைவி பிரியங்காவை கொன்றதும், 65 வயதான தனது தாயார் சாவித்ரியை கொன்றதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, முறையே12, 9 மற்றும் ஆறு வயதுடைய தனது குழந்தைகளையும் அவர் கொலை செய்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காரணம் என்ன?
45 வயதான அனுராக் சிங் மதுப்பழக்கத்தை விட வேண்டும் எனவும், இதற்காக போதை ஒழிப்பு மையத்திற்கு அவர் செல்ல வேண்டும் எனவும், குடும்ப உறுப்பினர்கள் அவ்வப்போது வலியுறுத்தி வந்துள்ளனர். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. அதே கோரிக்கையை வலியுறுத்தி தான் வெள்ளியன்றும், அனுராக் சிங்கிடம் குடும்ப உறுப்பினர்கள் பேசியுள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த அனுராக் சிங் 5 பேரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு தானும் தற்கொல செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.