UP Murder: கழுத்தில் பிளேட், உணவில் விஷம் - 4 தங்கைகள், தாயை கொடூரமாக கொன்ற இளைஞர் - தந்தை எங்கே?
UP Murder: ஆண்டின் கடைசி நாளில் பெற்ற தாய் மற்றும் 4 சகோதரிகளை கொடூரமாக கொன்றதாக, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்யதுள்ளனர்.
UP Murder: குடும்ப பிரச்னை காரணமாக தாய் மற்றும் 4 சகோதரிகளை கொடூரமாக கொன்றதாக, கைதான இளைஞர் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
தாய், 4 தங்கைகளை கொன்ற இளைஞர்:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு ஓட்டலில், தாய் மற்றும் அவரது நான்கு மகள்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக அர்ஷத் எனும் இளைஞர் தனது தாய் மற்றும் தங்கைகளுக்கு, போதை உணவு மற்றும் மதுவை வழங்கி பின்னர் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அர்ஷத் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடந்தது என்ன?
மணிக்கட்டில் வெட்டுக் காயங்களுடனும், கம்பளி ஆடைகள் ரத்தத்தில் நனைந்த நிலையில் 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளப்ன. முதற்கட்ட விசாரணையில், சாப்பாட்டில் போதையை கலந்து கொடுத்து அர்ஷத் கொலை செய்தது தெரியவந்துள்ளது. உணவு மற்றும் மதுவில் விஷம் கலந்து கொடுத்த பிறகு, சிலர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாகவும், சிலர் பிளேடால் மணிக்கட்டு போன்ற இடங்களில் வெட்டப்பட்டு கொல்லப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, ஆரம்பகட்ட விசாரணையில் கடுமையான வாக்குவாதம் கொலைகளுக்கு வழிவகுத்தது தெரிய வந்துள்ளது. விசாரணை முடிந்ததும், கொலையாளியின் நோக்கம் குறித்த கூடுதல் தகவல்களை நாங்கள் வெளிப்படுத்த முடியும்" என போலீசார் குறிப்பிட்டனர்.
தந்தையை தேடும் பணி தீவிரம்:
ஆக்ராவைச் சேர்ந்த குடும்பம், டிசம்பர் 30 முதல் ஹோட்டலில் தங்கியிருந்தது. இறந்தவர்கள் அர்ஷத்தின் தாய் அஸ்மா மற்றும் அவரது சகோதரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களின் வயது முறையே 9, 16, 18 மற்றும் 19 ஆகும். இந்த கொலை வழக்கில் அர்ஷாத்தின் தந்தை பதர் என்பவரையும் போலீசார் சந்தேக நபராக குறிப்பிட்டுள்ளனர். தந்தை இன்னும் தலைமறைவாக உள்ளதால், அவரை தேடும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்த பின்னர் தடயவியல் குழு இப்போது குற்றம் நடந்த இடத்தைப் பாதுகாத்துள்ளது.
எதிர்க்கட்சி கண்டனம்:
இந்த கொலைகள் குறித்து சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஃபக்ருல் ஹசன் சந்த் கூறுகையில், "ஒரு குடும்பம் இல்லாதது வருத்தமளிக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம், மன அழுத்தம், வறுமை ஆகியவை கொலைகளுக்குக் காரணமாக இருக்கலாம். எங்கள் கட்சி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கிறது, அவர்களின் மரணத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
சமூக வலைதளத்தில் வீடியோ:
அர்ஷத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “எனது தாயையும் சகோதரிகளையும் என் கையால் கொன்றுவிட்டேன். இதற்கு, நகராட்சியில் வசிப்பவர்களே பொறுப்பு. எங்களுடைய வீட்டைப் பறிப்பதற்காக இவர்கள் எத்தனையோ அட்டூழியங்களைச் செய்தார்கள். நாங்கள் குரல் எழுப்பியபோது, யாரும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. குளிர்காலத்தில் 10-15 நாட்கள் வீடின்றி அலைந்தோம். இந்தக் கொலைகளுக்கு முழு காலனியும் பொறுப்பு” என பேசியுள்ளார். அர்ஷத் ஏற்கனவே தனது குழந்தையை கொன்றதாகவும் ஒரு குற்றச்சாட்டு நிலவுவதாக கூறப்படுகிறது.