காதலனுடன் சிக்கிய மனைவி, மூக்கை கடித்து துப்பிய கணவன் - கள்ளக்காதலால் களேபரம்
UP Crime: திருமணத்தை மீறி காதலனுடன் இருந்த மனைவியை கையும் களவுமாக பிடித்து, அவரது மூக்கை கணவன் கடித்து துப்பிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

UP Crime: திருமணத்தை மீறிய உறவிலிருந்த மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியின் மூக்கை கடித்த கணவன்:
உத்தபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில், திருமணத்தை மீறி காதலனுடன் இருந்தபோது தனது மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்துள்ளார். அப்போது, ஆத்திரத்தில் தனது மனைவியின் மூக்கை கடுமையாக கடித்து சிதைத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த 25 வயது பெண் அதிகளவில் ரத்த கொட்டிய நிலையில், அவசர அவசரமாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய கணவனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நடந்தது என்ன?
அந்த பெண் தனது கிராமத்திலேயே வசிக்கும் காதலனை சந்திப்பதற்காக சென்றுள்ளார். இதனை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த கணவன் ராம் கிலாவன், கையும் களவுமாக பிடிப்பதற்காக தனது மனைவியை ரகசியமாக பின் தொடர்ந்துள்ளார். அதன்படி, இருவரும் வீட்டிற்குள் இருந்தபோது உள்ளே நுழைந்து, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற ராம், தனது மனைவியின் மூக்கை அவரது காதலனின் முன்பாகவே பயங்கரமாக கடித்துள்ளார். மூக்கு சிதைந்து ரத்தம் கொட்ட வலி தாங்க முடியாமல் அந்த பெண் அலறி துடிக்க, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
காவல்துறை சொல்வது என்ன?
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலதுறையினர், படுகாயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்த மருத்துவர்கள், காயம் மிகவும் தீவிரமாக இருப்பதால் பாதிக்கப்பட்ட பெண்ணை உயர் சிகிச்சைக்காக லக்னோ கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து கோணங்களிலும் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் தொடரும் விநோத சம்பவங்கள்:
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால், அங்கு இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி பல இடங்களில் பெருமை பேசி வருகிறார். ஆனால், அங்கு விநோதமான குற்றசம்பவங்கள் நிகழ்வது என்பது குறைந்தபாடில்லை. குறிப்பாக திருமணத்திற்கு பிறகான தகாத உறவுகள், அதுசார்ந்த கொலைகள் என்பவை அதிகளவில் பதிவாகி வருகின்றன. இதுபோக கடைசி நேரத்தில் திருமணம் நின்றுபோவது, மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையுடன் தாய் ஓடிப்போவது, மகளின் மாமனாருடன் பெண் ஓடிப்போவது போன்ற கவனத்தை ஈர்கக்கூடிய சம்பவங்களும் தொடர்ச்சியாக அரங்கேறிய வண்ணம் உள்ளன.





















