Crime : 100 செயலிகள்....நிர்வாண புகைப்படங்களை காட்டி மிரட்டிய கும்பல்...சிக்குமா 500 கோடி ரூபாய்? பின்னணியில் சீனர்கள்
உடனடி கடனாக கொடுத்து விட்டு 500 கோடி ரூபாய் பணத்தை மிரட்டி பறித்தது தொடர்பாக நாடு முழுவதும் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடன் கொடுப்பதாக கொடுத்துவிட்டு பின்னர் வாங்கிய கடனை அந்நியமான வட்டியுடன் வாங்கும் பாணி இந்தியா முழுவதும் பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. அந்த வகையில், உடனடி கடனாக கொடுத்து விட்டு 500 கோடி ரூபாய் பணத்தை மிரட்டி பறித்தது தொடர்பாக நாடு முழுவதும் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செயலி மூலம் கடனை கொடுக்கும் அக்கும்பல், 100 பேரிடம் விண்ணப்பம் பெற்று அவர்களின் பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்களை சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள சர்வர்களில் பதிவேற்றி இருப்பதாக மூத்த காவல்துறை அலுவலர் பகீர் தகவலை பகிர்ந்து உள்ளார்.
இந்த கும்பல் குறித்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக ரகசிய விசாரணை நடத்தப்பட்ட பிறகு, டெல்லி காவல்துறையால் கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் பிற மாநிலங்களிலும் இந்த நெட்வொர்க் பரவி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோவில் உள்ள ஒரு கால் சென்டரைச் சேர்ந்த இக்கும்பல், விண்ணப்பங்களைப் பெற்று சிறிய அளவிலான கடனை வழங்கி உள்ளது. செயலிக்கான அனுமதியினை வழங்கியவுடன், சில நிமிடங்களில் அவர்களுக்கான கடன் பணம் அவர்களின் கணக்கில் செலுத்துபட்டுவிடுகிறது.
இதுகுறித்து வரிவாக பேசிய காவல்துறை துணை ஆணையர் கேபிஎஸ் மல்ஹோத்ரா, "அந்த கும்பல், போலி ஐடிகளில் பெறப்பட்ட பல்வேறு எண்களில் இருந்து பயனாளர்களை அழைத்து, கோரிக்கைக்கு செவிசாய்க்கத் தவறினால், அவர்களின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாணப் படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவோம் என்று மிரட்டி பணம் பறித்துள்ளார்கள்.
அச்சம் காரணமாக, பயனர்கள் பணத்தை கொடுத்து விடுகின்றனர். பின்னர், அது சீனாவிற்கு ஹவாலா அல்லது கிரிப்டோகரன்சியாகவோ செல்கிறது. இந்தக் கும்பல் பல கணக்குகளைப் பயன்படுத்தியதாகவும், ஒவ்வொரு கணக்குக்கும் ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
கேஷ் போர்ட், ரூபே வே, லோன் கியூப், வாவ் ரூபி, ஸ்மார்ட் வாலட், ஜெயண்ட் வாலட், ஹாய் ரூபி, ஸ்விஃப்ட் ரூபி, வாலட்வின், ஃபிஷ்க்ளப், யேகாஷ், ஐம் லோன், க்ரோட்ரீ, மேஜிக் பேலன்ஸ், யோகாஷ், பார்ச்சூன் ட்ரீ, சூப்பர்காயின், ரெட் மேஜிக் ஆகிய செயலிகள் மூலம் பணம் பறிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 51 மொபைல் போன்கள், 25 ஹார்ட் டிஸ்க்குகள், ஒன்பது மடிக்கணினிகள், 19 டெபிட் கார்டுகள்/கிரெடிட் கார்டுகள் மற்றும் மூன்று கார்கள் மற்றும் ₹ 4 லட்சம் ரொக்கம் ஆகியவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
சீனர்களின் தூண்டுதலின் பேரில் இந்த மோசடி நடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட உறுப்பினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். சில சீனர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.