தஞ்சையில் கோயில் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கிச் சென்ற மர்மநபர்கள்
தஞ்சை பள்ளிஅக்ரஹாரம் மங்கள விநாயகர் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாநகராட்சி 1-வது வார்டு பள்ளி அக்ரஹாரம் வடக்கு தெருவில் மங்கள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். கடந்த ஜூன் மாதம் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் கோவில் அடைக்கப்பட்டது. இதனை அறிந்து நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவில் கேட்டின் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை அப்படியே அலேக்காக தூக்கி கொண்டு தப்பி ஓடினர். கோவிலின் கேட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டும், உண்டியல் காணாதது கண்டும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மர்ம நபர்கள் உண்டியலை தூக்கி சென்றது அவர்களுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உண்டியல் தூக்கி சென்றதால் அதில் எவ்வளவு பணம், நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.திருட்டு நடந்த இந்த கோவிலில் ஏற்கனவே கடந்த மாதம் உண்டியல் உடைத்து பணம் ,நகை திருட்டு போனது குறிப்பிடத்தக்கது. தற்போது உண்டியலையே திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உண்டியலை தூக்கிச் சென்றவர்கள் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளியின் பின்புறம் உண்டியலை உடைத்து பணம் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். உண்டியலை கைப்பற்றிய போலீசார் கைரேகை நிபுணர்கள் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பள்ளியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தான் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் இணைப்பு வழங்காததால் இதனை அறிந்த சிலரே செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கஞ்சா விற்றவர்கள் கைது
தஞ்சை மாவட்டத்தில் மதுப்பாட்டில்கள் மற்றும் கஞ்சா விற்ற 48 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை பூச்சந்தை அருகே மது விற்பனை நடப்பதாக தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகம்படும் வகையில் நின்று கொண்டிந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் மணக்கரம்பை இந்திராநகரை சேர்ந்த குமார்(56) என்பதும் மது விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தஞ்சை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தஞ்சையில் மாநகரம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதிகளில் மது விற்ற 14 பேர் மற்றும் திருவையாறு பழைய போலீஸ் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவையாறு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த கணேச மூர்த்தி (26) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுப்பாட்டில்கள் மற்றும் 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
48 பேர் கைது: கும்பகோணம், பட்டுக்கோட்டை மதுவிலுக்கு அமல் பிரிவு போலீசார் அந்ததந்த சரக பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மதுவிற்ற 30 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பூதலூர், திருநீலக்குடி போலீசார், அந்தந்த பகுதியில் மது விற்ற 2 பேரை கைது செய்து மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதில் மாவட்ட முழுவதும் ஒரே நாளில் 48 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மொத்தம் 335 மதுபாட்டில்கள் மற்றும் 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.