மயிலாடுதுறையில் இளைஞர் கொலையில் சிறுவன் உட்பட இருவர் கைது
மயிலாடுதுறை அருகே இளைஞரை கொலை செய்து ரயில்வே தண்டவாளத்தில் வீசிச் செல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய சிறுவன் உள்ளிட்ட இரண்டு பேரை மயிலாடுதறை தனிப்படை போலீஸார் 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே மூவலூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் என்பவரின் மகன் 20 வயதான ராஜ்குமார். இவர் கட்டுமான பணியில் சித்தாளாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை, அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் ராஜ்குமாரை தேடியுள்ளனர். இந்த சூழலில் நேற்று காலை மயிலாடுதுறை அருகே மஞ்சளாறு ரயில்வே தண்டவாளத்தில் இடது கண், பின் தலையில் பாட்டில் மற்றும் கருங்கல்லால் குத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்காக காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மயிலாடுதுறை சித்தர்காடு தெற்குவீதியைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவரின் மகன் 22 வயதான கபிலன் மற்றும் குத்தாலம் மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் ஆகியோர் ராஜ்குமாரை அடித்துக்கொன்றது தெரியவந்தது. மேலும், இந்த மூவரும் இணைந்து சிறு சிறு குற்றச்சம்பாவங்களில் ஈடுபட்டதும், இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகவே கொலை நேரிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, வீட்டில் பதுங்கியிருந்த கபிலன் மற்றும் சிறுவனை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். கொலை நடந்து 24 மணி நேரத்தில் கொலை செய்தவர்களை கண்டறிந்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடு போவது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காவல் நிலையங்களில் புகார் தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தனிப்படை அமைத்து இருசக்கர வாகன திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தனிப்படை காவல் துணை ஆய்வாளர் இளையராஜா தலைமையில் வாகனத் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் காரைக்கால் மாவட்டம் குரும்பகரம் கிராமத்தை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவரை கைது செய்தனர். இந்த நபர் மயிலாடுதுறை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து ஜெய்கணேஷை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்து 3.50 லட்சம் ரூபாய் மதிப்புடைய 5 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஜெய்கணேஷ் மீது சிலை கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.