புஷ்பா பட பாணியில் 130 கிலோ கஞ்சா கடத்தல்: ஆந்திராவில் இருவர் கைது!
குற்றம் சாட்டப்பட்டவர் கஞ்சா பைகளை சேமிக்க வாகனத்தில் ஒரு சிறப்பு அலமாரியை உருவாக்கியிருந்தார்.
ஆந்திராவில் அலூரி சித்தராமராஜூ மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 130 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை போலீசார் பகிர்ந்துள்ளனர்.
2021ம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான புஷ்பா:தி ரைஸ் படத்தால் ஈர்க்கப்பட்டு அவர் அதே பாணியில் கஞ்சாவைக் கடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. படத்தில் வருவது போல கஞ்சாவை ஒரு பொலேரோ வாகனத்தின் உச்சியில் மறைத்து வைத்து கடத்த முயற்சி செய்துள்ளனர்.
தும்பிரிகுடா மண்டலத்தின் கின்சாமண்டா கிராமத்தில் உள்ள சிறப்பு அமலாக்க பிரிவினரால்(SEB) இந்த கஞ்சாச் செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள கடத்தலைப் பின்பற்ற முயற்சித்த குற்றம் சாட்டப்பட்டவர், ஒரு சிறப்பு அலமாரியை தனது பொலீரோ வாகனத்தின் மேல் பகுதியில் அமைத்துள்ளார். அந்த மேல் பகுதியில் கஞ்சாவை சேமித்து வைத்திருந்தார். இதை அடுத்து அவர்கள் மாநில எல்லையை கடக்க முயன்றனர்.
சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற வாகனத்தை SEB காவல்துறையினர் மறித்துத் தடுத்தனர். சோதனையில், 130 கிலோ கஞ்சா வாகனத்தின் மேல் பகுதியில் மறைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் கஞ்சா பைகளை சேமிக்க வாகனத்தில் ஒரு சிறப்பு அலமாரியை உருவாக்கியிருந்தார். கோராபுத்தின் பாங்கி மகேஷ்வர் மற்றும் தும்ப்ரிகுடாவின் ரமேஷ் ஆகிய இரண்டு பேர் இதை அடுத்து கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் கைது செய்யப்பட்ட இருவரையும் தும்பிரிகுடா போலீசாரிடம் அமலாக்கத்துறை ஒப்படைத்தது. இதை அடுத்து தற்போது வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, மற்றொரு சம்பவத்தில் வில்லியனூர் அருகே கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் நேற்று மாலை 4 மணி அளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக இருந்தார். இதுபற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மேற்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன், வில்லியனூர் ஆய்வாளர் வேலைய்யன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டனர். அவரது கழுத்தில் பின்பக்கமாக வெட்டுக்காயம் இருந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் வில்லியனூர் கணுவாப்பேட் பகுதியை சேர்ந்த பழனிராஜா என்பவரின் மகன் பிரவீன் என்கிற பிரவீன்குமார் (வயது 24) என்பது தெரியவந்தது. ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. கணுவாப்பேட்டை பகுதியில் உள்ள பிரபல ரவுடி ஒருவருக்கும், பிரவீன்குமாருக்கும் கஞ்சா விற்பது தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது. இதுதொடர்பாக சமாதானம் பேச அழைத்து மதுகுடிக்க வைத்து பிரவீன்குமாரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த பயங்கர கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கஞ்சா விற்பனை தகராறில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் வில்லியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.