திருவண்ணாமலை: அரசு மருத்துவமனை கழிவறையில் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை.. தீவிர விசாரணை!
திருவண்ணாமலை தானிப்பாடி அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறையில் பச்சிளம் குழந்தை சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனை இருபது வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனைக்கு தானிப்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள், மலை கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தானிப்பாடி அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் தானிப்பாடி அரசு மருத்துவமனையில் இரவு தங்கி சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பிறந்து சில மணி நேரம் ஆன பச்சிளம் குழந்தை சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அங்குள்ள செவிலியருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து கழிவறைக்கு சென்று சடலத்தை பார்த்த மருத்துவர் திருவண்ணாமலை தலைமை மருத்தவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தானிபாடி காவலர்கள் கழிவறையில் உள்ள குழந்தையின் சடலத்தை கைப்பற்றினர். மேலும் அரசு மருத்துவ மனையில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் மருத்துவ மனையில் எதிரே உள்ள உணவகங்கள் , கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமகராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறையில் இருந்த பெண் குழந்தையின் சடலத்தை வீசி சென்றவர்கள் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தில் பச்சிளங் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய தாணிபாடி காவல்துறை துணை ஆய்வாளர்,
தாணிப்பாடி அரசு மருத்துவமனை கழிவறையில் சடலமாக இருந்த பெண் குழந்தையை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்கு அனுப்பியுள்ளோம். மருத்துவ மனையில் உள்ள கண்கணிப்பு கேமரா மற்றும் வெளியே உள்ள கடைகளின் கேமராவை ஆய்வு செய்து வருகிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் டிஸ்சார்ஜ் ஆகி சென்றவர்களின் பட்டியலை எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.