எட்டாம் வகுப்பு மாணவியை 4 ஆண்டுகளாக ஏமாற்றி வந்த முன்னாள் ஆசிரியருக்கு வலை!
எட்டாம் வகுப்பிலிருந்து மாணவியை ஏமாற்றி, நான்கு ஆண்டுகளாக அவருக்கு பல்வேறு தொல்லை அளித்து வந்த முன்னாள் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(32). இவர் ஆசிரியர் பட்ட படிப்பு முடித்து விட்டு வேலை இல்லாமல் அரசு தேர்வுக்கு படித்துகொண்டிருந்தார். அப்போது ஆரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 2016ம் ஆண்டு சேர்ந்து பணியாற்றி வந்தார். இவர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில ஆசிரியராக பாடம் நடத்தி வந்துள்ளார். அப்போது, அதே தனியார் பள்ளியில் ஆரணி டவுன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அந்தப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆசிரியர் ராஜாவுக்கும், அதே பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் ஆசிரியர் ராஜா குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுப் பணியில் சேர்ந்தார். 4 ஆண்டுகாலமாக திருவாரூர் மாவட்டத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வருகின்றார். இருப்பினும் ஆரணியில் பள்ளி மாணவியிடையே ஏற்பட்ட நட்பு தொடர்ந்து பழகி பேசிவந்துள்ளனர்.
கடந்த 16ஆம் தேதி ஆசிரியர் ராஜா மாணவியிடம் தொடர்பில் இருப்பது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இந்த கதையை அறிந்து அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் முன்னாள் ஆசிரியர் ராஜா மீது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.
இது குறித்து உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஆரணி அணைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளியிலிருந்து சென்ற பின்பும் மாணவியுடனான தொடர்பினை ராஜா நீட்டித்துள்ளார்.
ஆரணியிலுள்ள வீட்டுக்கு அடிக்கடி வரும் ராஜா மாணவியை பெற்றோருக்குத் தெரியாமல் சந்தித்துப் பேசிவந்ததும் கடந்த நான்கு ஆண்டுகளாக மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பேசி வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் அந்த மாணவி இந்த வருடம் பண்ணிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளார் .
சில நாட்களுக்கு முன்புதான் ராஜாவிடம் தன் மகள் சிக்கியிருப்பதை மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து மாணவியின் தாய் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், மகளுக்குப் பாதுகாப்புக் கோரியும் தாய் திருவண்ணாமலை எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜாவை தேடி வருகின்றனர்.
மாணவின் வன்கொடுமை பற்றி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டியிடம் பேசியபோது , ‛‛தனியார் பள்ளி ஆசிரியர் மாணவியிடம் அவருக்கு திருமணம் ஆகியதை மறைத்து, விட்டு ஆசை வார்த்தைகளை கூறி பேசி வந்துள்ளார்.இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் எண்ணிடத்தில் நேற்று புகார் அளித்தார் அதன் அடிப்படையில் நான் இப்புகார் குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டேன் .
இதையடுத்து முன்னாள் ஆசிரியரும் இந்நாள் அரசு ஊழியருமான ராஜா மீது போக்ஸோ சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இதற்கிடையில் ராஜா தலைமறைவாகியிருப்பதால் அவரைத் தேடி தனிப்படை போலீஸார் ஆரணியிலிருந்து திருவாரூர் மாவட்டத்துக்கு விரைந்திருக்கிறார்கள். என தெரிவித்தார்