ரயிலில் பெண்ணிடம் அத்துமீறிய பயிற்சி டி.எஸ்.பி... தக்கநேரத்தில் காத்த காவலன் செயலி! என்ன நடந்தது?
ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சி டிஎஸ்பி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த மாணவி சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி விடுமுறையையொட்டி, எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊரான சங்கரன் கோயிலுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டார்.
ஏ.சி. பெட்டியில் பயணித்த அந்த மாணவி அமர்ந்திருந்த இருக்கைக்கு நேர் எதிரே வாலிபர் ஒருவரும் அமர்ந்துள்ளார். ரயில் எழும்பூரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அந்த வாலிபர், கல்லூரி மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். ஆனால் மாணவி எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக தன் வேலையை பார்த்துள்ளார்.
சிறிது நேரத்தில் அந்த பெட்டியில் பயணித்த அனைவரும் விளக்கை அனைத்துவிட்டு தூங்க ஆரம்பித்தனர். இரவு 12.30 மணிக்கு ரயில் விருத்தாச்சலம் அருகே சென்று கொண்டு இருந்தபோது, மாணவியின் இருக்கைக்கு எதிரே படுத்திருந்த அந்த வாலிபர், மாணவியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவி, உடனடியாக தனது செல்போனில் உள்ள காவலன் செயலி மூலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அந்த ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படைவீரர் அண்ணாதுரை மற்றும் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகரும், அந்த மாணவி பயணித்த பெட்டிக்கு விரைந்துள்ளனர்.
#kavalanApp .. ensure women safety... Tell about this app to ur sister, friends, colleagues, students, relatives...#SpreadtheWord pic.twitter.com/AyM8Vu5f8P
— ஆலி (@rohinitweetss) November 30, 2019
இதையடுத்து, அவர்களிடம் கல்லூரி மாணவி நடந்ததை கூறினார். பின்னர், அந்த மாணவிக்கு மற்றொரு பெட்டியில் ஒரு இருக்கையை ஏற்பாடு செய்து கொடுத்தனர். பின்னர் ரயில்வே பாதுகாப்புப் படை வீரரும், டிக்கெட் பரிசோதகரும் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அந்த வாலிபர் திருச்சியில் பயிற்சி டி.எஸ்.பி. ஆக உள்ள பி.மகேஷ்குமார் என்பதும், சென்னையில் இருந்து பயிற்சிக்காக திருச்சி சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை திருச்சி ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டு ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பயிற்சி டி.எஸ்.பி மகேஷ்குமாரை கைது செய்த காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

