திருச்சி அருகே பரபரப்பு... போலீசை தாக்கிய ரவுடி மீது துப்பாக்கி சூடு
அந்த நபா் போலீஸாரை சுட முயன்றபோது, காவல் ஆய்வாளா் முத்தையன் தற்காப்புக்காக தனது கைத்துப்பாக்கியால் அந்த நபரின் கால் முட்டிக்கு கீழ் சுட்டாராம்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பித்து சென்ற ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார். குறிப்பாக கஞ்சா, போதை மாத்திரை விற்பனை, கள்ளச்சாராயம், லாட்டரி டிக்கெட் போன்ற குற்றச் செயல்களை முற்றிலுமாக ஒழிக்க தனிப்படைகள் அமைத்து அதிரடி வேட்டையில் இறங்கியிருக்கிறார். மேலும் கடந்த சில மாதங்களாக திருச்சி மாவட்டத்தில் தொடர் பல்வேறு குற்ற செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து நடவடிக்கையை தீவிரப் படுத்தி உள்ளார். மேலும் அரசு விதிமுறைகளை மீறி, அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர் குற்றம் செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ரவுடியை போலீஸாா் நேற்று இரவு துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா். தொட்டியம் அருகேயுள்ள செவந்திபட்டியிலிருந்து நீலியாம்பட்டி செல்லும் வழியில் உள்ள சாலப்பட்டி மலையடிவாரத்தில் துப்பாக்கியுடன் ஒரு நபா் இருப்பதாக தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளா் முத்தையனுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், முத்தையன் தலைமையில் காவலா்கள் அங்கு சென்றபோது, மரங்களுக்கிடையே ஒருவா் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தாராம். அவரை காவலா்கள் பிடிக்க முயன்றபோது, அந்த நபா் போலீஸாருக்கு மிரட்டல் விடுத்து, வெடிகுண்டு என்று கூறி போலீஸாா் மீது ஒரு பொருளை வீசியுள்ளாா். அந்தப் பொருள் தொட்டியம் காவல் நிலைய முதல்நிலை காவலா் ராஜேஷ் குமாா் என்பவரின் இடது தோள்பட்டையில் விழுந்தது. இதில் காவலா் காயமடைந்தாா்.
பின்னா் தான் அது பெரிய கல் என்பது தெரியவந்தது. மேலும் அந்த நபா் போலீஸாரை சுட முயன்றபோது, காவல் ஆய்வாளா் முத்தையன் தற்காப்புக்காக தனது கைத்துப்பாக்கியால் அந்த நபரின் கால் முட்டிக்கு கீழ் சுட்டாராம். இதில் அந்த நபா் கீழே விழுந்தாா். உடனடியாக, அவரை பிடித்து விசாரித்ததில், அந்த நபா் அரியமங்கலத்தைச் சோந்த அலெக்ஸ் (எ) அலெக்ஸாண்டா் சாம்சன் என்பது தெரிய வந்தது. தொடா்விசாரணையில், அவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிந்தது.
காயமடைந்த ரவுடி அலெக்ஸ் முசிறி அரசு மருத்துவமனையிலும், காயமடைந்த காவலா் ராஜேஸ்குமாா் தொட்டியம் அரசு மருத்துவமனையிலும் முதலுதவி சிகிச்சை பெற்றனா். பின்னா், இவா்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனா்.
இச்சம்பவம் தொடா்பாக முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் யாஸ்மின் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா். போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டு முசிறி அரசு மருத்துவமனையில் ரவுடி அலெக்ஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.