திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை
திருச்சி அருகே மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சியை அடுத்த நம்பர்-1 டோல்கேட் அருகே உள்ள பசுமை நகரை சேர்ந்தவர் குமரன் (வயது 50). இவர் திருச்சியில் உள்ள தனியார் மருந்து விற்பனை நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் குமரன் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி வளர்மதியை (46) ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். நள்ளிரவு தம்பதி இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த இரும்பு பீரோவின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும், அதில் வைத்திருந்த தங்க சங்கிலி, தோடு, மோதிரம், நெக்லஸ் மற்றும் வளையல் உள்பட 25 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து குமரன் கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் துப்பறியும் நாய் சம்பவம் நடந்த வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு, அருகே உள்ள ரெயில் நிலையம் வரை ஓடிச்சென்று நின்றுவிட்டது, யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொள்ளையர்கள் உடைத்த பீரோவில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து குண்டர் சட்டம், உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், தொடர் கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர்களை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்கள், பெண்கள் பற்றிய தகவல்களை அருகில் உள்ள காவல்நிலையத்தில் தெரிவிக்க வேண்டும், அதேபோல் வெளியூர் செல்லும் நபர்கள் தங்களுடைய விவரங்களை காவல்நிலையத்தில் தெரிவித்து செல்ல வேண்டும் எனவும், அறிவுரைகள் வழங்கபட்டுள்ளது என்றனர். குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.