India Vs China: நீ ஒண்ணும் அவ்ளோ நல்லவன் இல்லையே.? இந்தியாவிற்கு உதவ தயார் என சீனா அறிவிப்பு... எதற்கு.?
இந்தியா அதன் வர்த்தக பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், இந்தியாவிற்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.

பொதுவாக, எதிரிக்கு எதிரி தான் நண்பன் என்று கூறுவார்கள். ஆனால், எதிரியின் நண்பனையே நண்பனாக்க முடிவு செய்துள்ளது சீனா. ஆம், இந்தியாவிலிருந்து தரமான பொருட்களை சீன சந்தைகளில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கும் வகையில், இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்கா - சீனா இடையே உச்ச கட்டத்தை அடைந்த வர்த்தகப் போர்
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்த நிலையில், சீனாவிற்கு 34 சதவீத வரியை விதித்தார். அதற்கு பதிலடியாக, அமெரிக்காவிற்கு 34% வரியை விதித்தது சீனா. இதைத் தொடர்ந்து, சீனாவிற்கான வரியை 104%-ஆக உயர்த்தினார் ட்ரம்ப். அதற்கு பதிலடியாக, அமெரிக்காவிற்கான வரியை 84%-ஆக உயர்த்தியது சீனா. இதைத் தொடர்ந்து, சீனவிற்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தினார் ட்ரம்ப்.
இதற்கும் பதில் வரி விதிப்போம் என சீனா எச்சரித்த நிலையில், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிரடியாக 145 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார் ட்ரம்ப். இதைத் தொடர்ந்து, சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான வரிகளை 125 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து சீன விமான நிறுவனங்கள் விமானங்களை வாங்கக் கூடாது எனவும், விமானம் தொடர்பான கருவிகளையும் வாங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது அந்நாட்டு அரசு.
இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் 100 சதவீதம், அதாவது 245 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இது சீனாவிற்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளை வளைத்துப் போடும் சீனா
இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான தனது வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் பல்வேறு நாடுகளுக்கு நேரிலேயே சென்று, அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே வியட்நாமிற்கு சென்ற அவர், அதன் பின்னர் மலேசியாவிற்கு சென்றார். அங்கு, சீன அதிபர் ஷி ஜின்பிங், மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிம், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்குமிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தெரிகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அமெரிக்கா அதிகப்படியான வரிகளை விதித்துள்ள நிலையில், அந்நாடுகளின் நம்பிக்கைக்குரிய வர்த்தக நண்பனாகும் முயற்சியில் சீனா தற்போது இறங்கியுள்ளது. இதனால், ட்ரம்ப்பின் வரிகள் பாதிப்பை ஏற்படுத்தினாலும், அதை சமாளிக்க இந்த நாடுகளுடனான கூடுதல் வர்த்தகம் உதவும் என சீனா நம்புகிறது.
சீனாவில் வர்த்தகம் செய்ய இந்தியாவிற்கும் அழைப்பு
இந்த நிலையில், சீனாவில் இந்திய பொருட்களை சந்தைப்படுத்த, அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பேசியுள்ள சீன தூதர் ஷு ஃபீஹோங், அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய வர்த்தக இழப்பை சமாளிக்கும் வகையில், தரமான இந்திய பொருட்களை இறக்குமதி செய்து, சீன சந்தைகளில் விற்பனை செய்ய அந்நாடு தயாராக இருப்பதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா வெளிப்படைத் தன்மையுடன், பாரபட்சமற்ற வர்த்தக சூழலை சீன நிறுவனங்களுக்கு வழங்கும் என்று நம்புவதாகவும் ஃபீஹோங் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், போட்டி மோதலாக மாறிவிடக் கூடாது என்ற மோடியின் சமீபத்திய கருத்தை பிரதிபலிக்கும் விதமாக, நிலையான மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய உறவிற்கு பேச்சுவாத்த்தை மிகவும் முக்கியம் என்றும், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இந்திய பிரதமரை அன்புடன் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா இந்தியாவின் நட்பு நாடாக இருக்கும் நிலையில், சீனாவின் இந்த ஆஃபருக்கு இந்தியா என்ன பதில் அளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.