IPL 2025 LSG vs RR: பவுலிங்கில் கலக்கிய ராஜஸ்தான்.. மார்க்ரம், பதோனி அபாரம்! 181 ரன்களை எடுக்குமா?
IPL 2025 LSG vs RR:லக்னோ அணி ராஜஸ்தான் அணிக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் இன்று நடந்த 36வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட் செய்தது. இதையடுத்து மார்ஷ் - மார்க்ரம் ஆட்டத்தை தொடங்கினர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள்:
லக்னோ அணியின் முக்கிய வீரரான மார்ஷ் 4 ரன்னில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய நிகோலஸ் பூரணை சந்தீப் சர்மா தனது அபாரமான பவுலிங்கால் எல்பிடபுள்யூ ஆக்கினார். அவர் 8 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு அவுட்டானார்.
இதையடுத்து, களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 3 ரன்னில் அவுட்டானார். 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது மார்க்ரம் - பதோனி ஜோடி சேர்ந்தது. ஆர்ச்சர், தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே சவால் அளிக்கும் விதமாக பந்துவீசினர்.
மார்க்ரம், பதோனி அபாரம்:
சிறப்பாக ஆடிய மார்க்ரம் அரைசதம் விளாசினார். அரைசதம் கடந்த பிறகு அதிரடிக்கு மாறிய மார்க்ரமை ஹசரங்கா அவுட்டாக்கினார். அவர் 45 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 66 ரன்களில் அவுட்டானார். அவர் 130 ரன்களுக்கு அவுட்டான பிறகு பதோனி அதிரடி காட்டினார். இதனால், லக்னோ அணி 150 ரன்களை நெருங்கியது.
கடைசியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தனர். சிறப்பாக ஆடிய பதோனி 34 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 50 ரன்களுக்கு துஷார் தேஷ்பாண்டே பந்தில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் டேவிட் மில்லர் - அப்துல் சமத் ஆகியோர் அதிரடிக்கு மாறினர். அப்துல் சமத் கடைசியில் 10 பந்துகளில் 4 பவுண்டரி 30 ரன்கள் வரை களத்தில் இருந்தார்.
ஹசரங்கா 4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டையும், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, ஆர்ச்சர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார். லக்னோ அணி ராஜஸ்தான் அணிக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

